வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

தனித்தமிழகம்

இன்றைய சூழல்நிலையில் தனித்தமிழகத்தின் அதன் வாய்ப்புகள், மற்றும் சிக்கல்கள் குறித்து சில ஆய்வுகள்.

தனித் தமிழக முழுக்கத்தை தந்தை பெரியார், இந்திய விடுதலைக்கு முன்பே வைத்திருந்தார். அது முடக்கப்பட்டு, தற்போது ஈழத்தமிழர் இனப்படு கொலைக்குப் பின் மீண்டும் உருவெடுத்துள்ளது. அன்று அந்நிய நாட்டு வெள்ளையர்களிடமிருந்து, ஒன்றிணைக்கப்பட்டிருந்த இந்தியா, ஒன்று பட்டு போராடி அந்நிய நாட்டானை வெளியேற்றியது. ஆனால் தற்போது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு என்ற நிலையில்லை. உரிமைக்கான விடுதலை, இனப்பாதுகாப்பு என்ற நிலை. இது, அரசுகளைப் பொறுத்த வரை பிரிவினைவாதம் பயங்கரவாதம். இந்த உரிமைக்கான விடுதலை, இனப்பாதுகாப்பிற்கான போர்களை ஒடுக்க அனைத்து அரசுகளும் வரிந்து கட்டிக் கொண்டு ஒன்றிணைந்து, ஒடுக்கி நசுக்கி அழிக்கும். மக்களின் பாதுகாப்பு மற்றும் தேவைகளுக்காக அரசுகள் என்ற நிலை மாறி அதிகார வெறியர்களின் (அரசின்) பாதுகாபிற்காக மக்கள் என்றுள்ளது.

தற்போது இந்தியாவில் ௨௮ (28) மாநிலங்கள் உள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தனிநாட்டு கோரிக்கைகளை வைத்துள்ளன. இந்த மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, ஒரே அணியாக நின்று, ஒரே குரலில் கோரிக்கை வைக்கும் போது அது வலிமை உள்ளதாக இருக்கும். தனித்தனியாக வைக்கும் போது அக்கோரிக்கைகள் வலுவிழந்து போகிறது. தற்போது தமிழகத்திற்கும் கருநாடகத்திற்கும் இடையே காவேரி நதிநீர் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதன் காரணமாக இரு நாடுகளிக்கிடையே (மாநிலங்களுக்கு) கசப்புணர்வு உள்ளது. இரு நாடுகளும் இந்தியாவிடமிருந்து விடுபட விரும்புகின்றன. இந்த இரு நாடுகளும் தங்களின் கசப்புணர்வை ஒதுக்கி வைத்து, முதலில் ஒன்றிணைந்து இந்தியாவிடமிருந்து விடுபட வேண்டும். இல்லையேல் இந்திய இறையாண்மை, இந்த கசப்புணர்வை மேலும் மேலும் வளர்த்து, நிரந்தர அடிமைகளாகத்தான் வைத்திருக்கும்.

தற்போது இந்தியா போர்க் கருவிகள், உளவு அமைப்புகள் பொருளாதாரம் ஆகியவற்றில் வலுவாக உள்ளது. பிரிய வேண்டிய நாடுகளிடம் அது வலுவாக இல்லை, இருக்கக்கூடியதும் இந்தியாவின் பிடியில் உள்ளது. உலக மயமாக்கலுக்குப் பின் அரசியல்வாதிகளின் பார்வை மிகக் குறுகிப் போய்விட்டது. பணமனநோய் பீடித்திருக்கிறது. எனவே அரசியல்வாதிகளின் பார்வையில், ஒரே இந்தியாவாக இருக்கும் போது தான் எண்ணவே முடியாத அளவிற்கு கொள்ளையடிக்க முடியும். சிறு நாடுகளாகப் பிரிந்தால் அடிக்கும் மிகக் குறைந்த அளவே கொள்ளையடிக்க முடியும் என்பதால் அதற்கு முட்டுக் கட்டையாக இருப்பார்கள்.

சீனா போன்ற ஆதிக்க வெறி கொண்ட நாடுகள் நம் மீது ஆக்கிரமிப்பு செய்யும் வாய்ப்பு உள்ளது. தற்போது பிரிந்துள்ள சூடானுக்கு மேற்குலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காரணம் தெற்கு சூடானில் உள்ள எண்ணை வளத்தைத் தாரைவார்த்தது மற்றும் மதம் சார்ந்த காரணங்களுக்காக ஆதரவு தெரிவித்துள்ளன. இக்கோணத்தில்பார்க்கும் போது நமக்கு ஆதரவு என்பது கேள்விக் குறியே. ௨௫ (25) ஆண்டுகளுக்கும் மேல் போராடிய, உலகின் மிகச் சிறந்த விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ௨௩ (23) உலக நாடுகள் ஒன்றிணைந்து மிகப் பெரிய இன அழிப்போடு முடக்கியுள்ளனர். ஒவ்வொரு இன விடுதலையின் போதும் மிகப் பெரிய இப்படுகொலைகள் நடத்தப்படுவதும் நடந்து கொண்டு உள்ளன. ஆனால் யூதர்கள் தனி நாடு அமைக்க தன் இனத்தை பலி கொடுக்கவில்லை இனப்படுகொலை காரணமாக தனி நாடு என்ற கருத்து எழுந்தது. மிகச் சாதுர்யமாக, தங்களுக்கு என தனி நாட்டை அமைத்துக் கொண்டார்கள்.

மேற்குலக நாடுகளின் ஆதரவின்றி தனி நாடு என்பது மிகப் பெரிய சவால இருக்கிறது. மேற்குலக நாடுகளின் ஆதரவு வேண்டுமெனில், தனி நாடு அமைப்பதினால் ஏதேனும் ஒரு வழியில் அவர்களுக்கு ஆதாயம் இருக்க வேண்டும். இல்லையெனில் விடுதலைப் போருக்கு (உட்நாட்டு) மறைமுகமாக உதவிக் கொண்டு ஆயுத விற்பனையில் ஆதாயம் தேடி, பன்னெடுங்காலமாக போர்களை நடத்திக் கொண்டே இருப்பார்கள். நம்மிடம் எண்ணை வளம் இல்லை. தண்டகாரன்யா காடுகளில் உள்ள கனிம வளத்தை இந்திய அரசே, அந்த நாடுகளுக்கு ஒப்படைத்து விட்டது. அங்கு போராடும் அமைப்புகள், அவ்வளங்களை அந்த நாடுகளிடமிருந்து மீட்கவே போரை நடத்துகின்றன. இந்த நிலையில் மேற்குலக நாடுகள் இந்தியாவோடு இணைந்து, போராடும் அமைப்புக்களை நசுக்கி அழிக்கும்.

மனித வளம் இல்லாமல் இயற்கை வளங்களை பயன்படுத்த இயலாது. நம்மிடம் உள்ள மனித வளத்தை சீர்படுத்தி அதன் மூலம் நகர்வுகளை நகர்த்தலாம். மற்ற நாட்டு மக்களைவிட இந்திய நாடுகளில் உள்ள மக்களுக்கு அறிவுத்திறன் கூடுதல். ஆனால் ஒரு ஒழுங்கு கிடையாது. தன்னம்பிக்கை, உயர்ந்த மனப்பாங்கு, தன்னடக்கம் (சுய கட்டுப்பாடு) குறைவு அல்லது இல்லை.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் முதல் வரிசையில் ஒவ்வொரு தனித்தனி எண்ணாக எடுத்துப் பார்த்தால் மிகக் குறைந்த மதிப்பு கொண்டவை ஆனால் தகுதிக்கு தக்கவாறு வரிசையாக வைத்தால் அதன் மதிப்பு ௧௧௰௰ (1100).

இரண்டாவது வரிசையில் தகுதியை சிறிது மாற்றினால் அதன் மதிப்பு குறைகிறது.

மூன்றாவதாக வரிசையில் தனித்த மதிப்பில் உயந்த எண்ணை ஈற்றில் வைக்கும் போது அதன் மொத்த மதிப்பு மேலே உள்ள மதிப்புகளுடன் ஒப்பிட்டால் மிகக்குறைவு. இதே எண்ணில் சரியான படி வரிசைப்படுத்தினால் மற்ற இரு மதிப்புகளை விட மிக அதிகம்.

ஆனால், இறுதி வரிசையில் உள்ளபடி வைத்தால் ஒரு எண் என கூற இயலாது. மதிப்பை இழந்துவிடுகிறது. தனித்தனியாக, அதனதன் கோணத்தில் வைத்து மதிப்பிட முடியுமே அற்றி ஒன்றிணைத்து மதிப்பிட இயலாது. இதில் மூன்றாவதாக உள்ள எண் ஒன்பதா ஆறா எனக் கூற முடியவில்லை. இந்த வரிசையில் உள்ள ஒவ்வொரு எண்ணையும் நேர்படுத்தி, பின் உயர்மதிப்பைப் பெற சரியான இடங்களில் வைக்க வேண்டும். நமது மனித வளத்தின் நிலையும் இறுதி வரிசையில் உள்ளவாறு இருக்கிறது. இக்கடுமையான பணியினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையானது அரசியல், தொழில் வளர்ச்சி என அனைத்து துறையிலும் உள்ளது.

பகுத்தறிவு என்பது இறை மறுப்பு என்பதல்ல. அறிவைப் பயன்படுத்தி பகுத்து ஆராய்ந்து அறிவியலை வளர்த்து வாழ்க்கையை உயர்த்துவது. உளவியல் என்பது தற்போது மருத்துவத்துறையின் ஒரு பகுதி. தற்போது உளவியல் என்ற அறிவியல் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. உளவியல் பார்வையில் நாம் நம்மை ஆராய வேண்டியுள்ளது. பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டிருந்த நம் இனத்திற்கு தன்னம்பிக்கை, உயர்ந்த மனப்பாங்கு, தன்னடக்கம் ஆகியவற்றில் பின்தங்கியுள்ளோம். அதனால் ஆங்கிலத்திற்கு அடிமையாக உள்ளனர் நம் மக்கள். தன் மொழியின் மீது நம்பிக்கையிமில்லை, ஆங்கிலம் கற்கும் துணிவுமில்லை. புலம்பிக் கொண்டே, நிலையில்லாமல் இருக்கின்றனர். மொழியைப்பற்றிய தெளிவு கிடையாது. தன்னம்பிக்கையும் உயர்ந்த மனப்பாங்கும் வளரும் போது இப்புலம்பல்கள் இல்லாமல் தனது திறன்களை வளர்த்து ஒரு ஒப்பற்ற மனித வளம் உருவாகும். இந்த வளத்தின் மூலமாக தொழில்நுட்பங்களையும் தொழில்களையும் கைப்பற்ற வேண்டும். அதன் மூலமும், இனபடுகொலைகளின்றி நாம் நாட்டு விடுதலையைப் பெறலாம்.

ஈழத்தில் ௨௫(25) ஆண்டுகளுக்கு மேல், உலகின் தலைசிறந்த விடுதலை இயக்கம் நடத்தி வந்த விடுதலைப் போர் நசுக்கப்பட்டு, இனமே கிட்டத்தட்ட ஈழத்தில் அழிக்கப்பட்டு விட்டது. இந்த சூழலில், நாம் இருக்கும் நிலையில் நாம் எவ்வளவு காலம் நடத்தப் போகிறோம்? எவ்வளவு பேரை இழக்கப் போகிறோம்?

அரசு நிர்வாகம்

போராளிகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உழைப்பவர்கள். ஆனால் அரசு என்பது ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே ஆன நிர்வாகம் அல்ல. ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கான நிர்வாகம். தமிழகத்தின் தந்தையான ஈ.வே.ரா அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காகக் போராடினார். தொழில்வளர்ச்சி, கலை, இலக்கியம் போன்றவற்றிக்காக அவர் போராடவில்லை (சமூக விடுதலை இல்லையென்றால் இவற்றைப் பெற இயலாது).

ஈழத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன் ஈழ விடுதலைக்காக ஆயுதப் போர் நிகழ்த்தினார். அவரை தீவிரவாத இயக்கத்தின் தலைவர் என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் தான் உலகம் பார்த்தது. ஆயுதப் போரைக் காரணம் காட்டி மற்ற நாடுகள் நட்புறவை வளர்க்கவில்லை. ஆனால் மற்ற நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார். அரசுகள் என்பது மக்களுக்காக என்ற நிலை மாறி அதிகார வெறிகொண்ட மனிதர்களின் கூட்டம் என்பது ப.சிதம்பரத்தின் வெற்றி அறிவிப்பின் மூலமும் Wiki Leaks இணையதளம் வெளியிட்ட ஆவணங்களின் மூலமும் தெளிவாகத் தெரிகிறது. எனவே தொழில் வளர்ச்சி மற்றும் நாட்டுக்குத் தேவையான மற்ற துறைகளில் பெரும் தேக்க நிலையில் இருந்தது. தற்போது பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது ஈழநாடு.

ஆனால் ஒரு அரசு நிர்வாகம் என்பது மற்ற நாடுகளின் அங்கீகாரத்துடன் இருக்கும் பொழுதுதான் தொழில் வளர்ச்சிக்கும் கலை இலக்கிய பரிமாற்றங்களுக்கும் வழிவகுக்கும். அனைத்து துறை மற்றும் அனைத்து இன மக்களுக்காகவும் அதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

தற்காலத்தில் அரசியல் என்பது அதிகாரத்தைப்பயன்படுத்தி பணத்தை கொள்ளையடிப்பது, தொழில்துறையை கைப்பற்றுவது என்பதாக உள்ளது. சமூக நலன் என்பது துளியும் இல்லாது இருக்கிறது. அரசியல் என்பது சாக்கடையல்ல நதிநீர். நதியை துப்புரவாக வைத்துக் கொள்ளாதது நமது பிழை. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தகுதிக்கு தக்கவாறு பதவிகளை வழங்காதது. எடுத்துக்காட்டு கலைஞர் கருணாநிதி. இவர் திரைப்படம் மற்றும் நாடகங்களுக்கு கதை மற்றும் உரையாடல்கள், கவிதை, கலை, இலக்கியங்கள் படைக்கும் படைப்பாளி. இவரை இலக்கிய படைப்பாளியாக மட்டும் வைத்திருந்தால் தமிழ் மொழிக்கு அணி சேர்ந்திருக்கும். ஆனால் இவரின் படைப்புகளில் மயங்கிய மக்கள், தவறுதலாக ஆட்சி அதிகாரத்தை அளித்ததால் பண சேர்க்கும் மன நோய்க்கு ஆளாகி, ஏன் எதற்கு எப்படி சேர்க்கிறோம் என்ற வரைமுறை இல்லாமல் எவ்வளவு உள்ளது என்றே தெரியாத அளவுக்கு கொள்ளையடித்து அடியற்ற வாளியில் நீரை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர் மட்டுமல்லாமல் இவரைச் சார்ந்தவர்களுக்கும் இந்நோயைப் பரப்பி வளர்த்துக் கொண்டிருக்கிறார். இந்த மனநோய் தற்போது உலக மக்கள் அனைவரையும் பீடித்திருக்கிறது. இந்நோயை நோயாகவே பார்க்க மனித இனத்திற்கு தோன்றவே இல்லை. இதன் காரணமாக, இரண்டாம் உலகப் போருக்குபின் நாகரீக வளர்ச்சியடைந்திருந்த மனித இனம், தற்போது மீண்டு்ம் காட்டுமிராண்டி காலத்திற்கு வந்து நிற்பதை ஈழப்படுகொலைகளும், Wiki Leaks இணைய தளச் செய்தியும், இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எல்லையற்ற ஊழல்களும் வெளிப்படுத்தியுள்ளது.

போராளிகள்

காலத்தின் தேவையை உணர்ந்து தகுதியான மாற்றங்களுக்காக போராடுபவர்கள். மேலே கூறிய சாலை எடுத்துக்காட்டை எடுத்துக் கொண்டால் சாலையைச் சீரமைக்கவோ, மாற்றுச் சாலையை ஏற்படுத்தப போராடுபவர்கள். இப்போராளிகளின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் என பார்த்தால் வறுமையில் இருக்கும். காரணம் தன்னுடைய தனி வாழ்க்கையை பற்றிச் சிந்தித்து செயல்பட தோன்றாது. இப்போராளிகளின் சிந்தனை முழுக்க சமூகம் சார்ந்து இருக்கும். இப்போராளிகளின் எதிர்காலம் என்பது கேள்விக்குறிதான். காரணம் போராட்டம் என்பதே அரசிற்கு எதிராக இருப்பதால் சிறைக்கோ, சிதைக்கோ எந்நேரமும் செல்ல வேண்டியிருக்கும். மேலும் இவர்களின் வாரிசுகள் பெரும்பாலும் போராளிகளாக இருப்பதில்லை. இவர்களின் எண்ணங்கள் குறுகியிருப்பதில்லை, பரந்து விரிந்து இருக்கும். சமூகச் சிக்கல்களைத் தீர்க்க கடுமையான போராட்டங்களை நிகழ்த்த வேண்டியிருப்பதால் ஒன்றிணைதல் என்பது தேவையானதாக உள்ளது. எனவே இவர்களின் வட்டம் பெரியதாக இருக்கும். இப்போராளிகள் மக்களிடமிருந்துதான் உருவாகின்றனர். எந்த மனிதனிடம் சமூக கண்ணோட்டமும் அதற்கான செயல்பாடும் உள்ளதே அவர் போராளியாக உருவாகிறார். இப்போராளிகள் போராடுவது மக்களிடமிருந்து, மக்களுக்காக.

மக்கள்

வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகக் காத்திருக்கும் சாதாரண மனிதர்கள். இவர்கள் ஒரு அநீதி அல்லது அத்துமீறல் நிகழும் போது அதற்கு தனக்குத் தானே சாக்குப் போக்குச் சொல்லியோ, சமாதானம் சொல்லியோ அல்லது மறைந்து நின்று தனக்குள்ளேயே திட்டிக்கொண்டோ தனது அன்றாடப் பணிகளைச் செய்யச் சென்றுவிடுவர். அநீதிக்கு எதிராக போராடத் தோன்றாது அல்லது துணிவிருக்காது. இவர்கள், சட்டம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே கடைப்பிடிப்பர். காலத்தின் தேவையைக் கருதி சட்டத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றாது. உதாரணமாக “இந்த சாலை வழியாகத் தான் செல்ல வேண்டும்” என்று சட்டம் சொன்னால் அந்த சாலையில் தான் செல்வார்கள். சாலை சீராக இருக்கும் வரை சரி, காலப் போக்கிலோ, இயற்கையின் இடர்பாட்டின் காரணமாகவோ பழுதடைந்தால் மாற்றுச் சாலையில் செல்லலாம் என்று இவர்களுக்குத் தோன்றாது. மாறாக அந்த சாலையில் சென்று கையையோ காலையோ உடைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று, அங்கு கூடியிருக்கும் இவரைப் போன்றோரின் கூட்டத்தைப் பார்த்து, இவ்வளவு பேர் வருகிறார்களே, கூடுதல் மருத்துவர்களை ஏற்பாடு செய்யவில்லை என்று புலம்பிக் கொண்டும் தங்களுக்குள்ளே திட்டிக் கொண்டும் கூற வேண்டியவர்களிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல் அமைதியாக காத்திருந்து, முடிந்தால் மருந்துவம் பார்த்துவிட்டுச் செல்வர்.

௧௰௰ (100) பேர் கூடியிருக்கும் ஒரு இடத்தில் ஒரு மனிதனை ௨(2) பேர் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்து, தாக்கப்படும் மனிதனுக்காக பரிதாபப்படுவார்கள். ஆனால் ஒன்றிணைந்து தாக்கும் மனிதனை தட்டிக் கேட்கும் துணிவிருக்காது. நூறு பேரில் ஐந்து பேர் ஒன்றிணைந்தால் போதும், அந்த இருவர் இருக்கும் இடம் தெரியாது. ஆனால் தன்நலன் காரணமாக அமைதியாக நின்று வேடிக்கை பார்ப்பார்கள். தன்னம்பிக்கை அற்றுப் போய் எண்ணங்களும் குறுகிப் போய்விட்டது மக்களுக்கு.

தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைபற்றி மட்டுமே சிந்தித்து அதற்காக உழைத்துக் கொண்டும், தான் தன் குடும்பம் என்று வாழும் இவர்கள் தன் இனத்தின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்களை பல தலைமுறைகளுக்கு கொண்டு செல்பவர்கள். இம்மக்களுக்கு தன்னம்பி்க்கையையும், ஒருங்கிணையும் பண்பையும் வளர்க்க வேண்டியுள்ளது.

பரப்புரைகள்

தமிழக காங்கிரசு கட்சியில் உள்ளவர்களைப் பொருத்தவரை மிகக்குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள். ராசிவ் காந்தியின் மரண நிகழ்வினை காரணம் காட்டி தன் இனத்தை அழிப்பதை வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதை நியாயப் படுத்த முயற்சித்துக் கொண்டு இருக்கின்றனர். ஒரு விடுதலை இயக்கத்திற்காக ஒரு இனத்தையே படுகொலை, இன அழிப்பு செய்து கொண்டு இருக்கும் நடுவண் அரசை எதிர்க்க, ஆளும் (ஊழல்) திமுக விற்கோ தமிழக காங்கிரசுக்கோ துணிவில்லை. இராசிவ் காந்திக்கு அரசியல் அனுபவம் எவ்வளவு? அரசியல் அனுபவம் துளியளவும் இல்லாத ஒருவரை பிரதமராக்கினார்கள். இது ஒரு மிகப்பெரிய வரலாற்று பிழை. அனுபவமுள்ளவர்கள் காரங்கிரசில் இல்லையா? அல்லது ராசீவிற்கு தொலை நோக்குப் பார்வையுடன் ஆலோசனை கூற யாரும் முற்பட்டார்களா? இல்லையே. தன் சுய இலாபத்திற்குத் தான் சண்டையி்ட்டுக் கொண்டார்களே அன்றி தேசிய நலனில் அக்கரை இல்லை. ஒரு வேலை இந்திரா காந்திக்கு மகன்கள் இல்லாமல் இருந்திருந்து, ஒரு நாயை செல்லமாக வளர்த்திருந்தால் அந்த நாய் அல்லவா காங்கிரசின் தலைவராக இருக்கும். அந்த நாய்க்கு அல்லவா சேவகம் செய்வார்கள். இதே நிலை தான் சோனியாவிற்கும் ராகுலிற்கும்.

தலைமை அமைச்சரின் கட்டுப்பாட்டில் தான் அமைச்சரகமும் அதிகாரிகளின் செயல்படுகளும் அமைய வேண்டும். ஆனால் அன்று அனுபவமற்ற ராசீவ் காந்தி, இன்று பொம்மை மன்மோகன் சிங் ஆகியோர் அதிகாரிகளின் கைப்பாவையாக செயல்பட்டதால் ஈழத்துச் சிக்கல்களுக்கு தவறான முடிவுகள் எடுக்கப்பட்டது. காரணம் இந்தியாவில் தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் இடையே உள்ள கசப்புணர்வின் வெளிப்பாடு. வெளியுறவு செயலகம் மலையாளிகளின் ஆதிக்கம் நிறைந்தது. உள் நாட்டில் உள்ள கசப்புணர்வானது, தமிழர் என்ற காரணத்தினால் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்றும் ஈழத்தமிழர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் என்றும் உலகிற்கு காரணம் காட்டி இந்த படுபாதகச் செயலை செய்து கொண்டு இருக்கின்றனர். பாதுகாப்பு ஆலோசகராக இருந்த இனப்படு கொலைகாரன் எம்.கே.நாராயணனும், பாதுகாப்புச் செயலாளர் சிவசங்கர் மேனன் போன்ற மலையாள வெறியர்களின் கைப்பாவையாகத் தான் தலைமை அமைச்சர் உள்ளார்.

இந்தியா தனித்த இறையாண்மை கொண்ட நாடு என்ற நிலை முற்றிலும் ஒழிந்து போய்விட்டது. முன்பு எப்படி ஆங்கிலேயர்களிடம் வியாபாரம் என்று ஆரம்பித்து காலணியாக்கத்திற்கு உட்பட்டு பின் அடிமையாக்கப்பட்டதோ, அதே நிலைக்கு மீண்டும் காங்கிரசு கட்சி மிக வேகமாகக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடே கணக்கற்ற ஊழல்களும், ஒவ்வொரு ஊழலிலும் எண்ணிவிட முடியா தொகை இழப்பும், அயல் நாடுகளில் கருப்புப்பண பதுக்கலும், ஊழல் குறித்த வழக்குகளை நடுவண் புலனாய்வுத்துறையே திரும்பப் பெரும் அவலமும். மாவோயிட்டுகளின் வளர்ச்சியும்.

அதுமட்டுமா இந்தியா என்றும், இந்திய இறையாண்மையென்றும் இந்திய ஒருமைப்பாடு குறித்துப் பேசும் தமிழக காங்கிரசு கட்சி உறுப்பினர்கள், என்றைக்காவது இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கொடூரமாக கொலைகள் நடத்தியது குறித்து கண்டனத்தையாவது தெரிவித்ததுண்டா? எங்கே போயிற்று இவர்களின் இறையாண்மை? தமிழக காங்கிரசு கட்சியினரின் மனப் போக்கானது குரங்கு, புண்ணை ஆற வைப்பது போன்றது. குரங்கிற்கு சிறிய புண் ஏற்பட்டால் அப்புண்ணை சரி செய்ய, அப்புண்ணை தரையில் வைத்துத் தேய்த்துக் கொண்டே இருக்குமாம். காங்கிரசு ஆதரவாளர்கள், குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர் போன்றவர்கள். குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர், அப்பழக்கம் கொடியது என்று தெரிந்தும் மீள முடியாமல் அதைத் தொடர்வதைப் போல, காங்கிரசின் ஆதரவாளர்கள் அக்கட்சியின் கொடூரப் போக்கு தெரிந்தும் அதிலிருந்து மீளத் தெரியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர்.

தனித் தமிழகம் என்ற கோரிக்கை முன்வைக்கும் போது, தமிழர்கள் எனக் குறுகிய மனப்பான்மையுடன் பிரிவினை பேசுவதாகக் கூறும் இவர்கள் தங்கள் பார்வை தொலைநோக்கு பார்வை எனக் கூறுவர். வானில் வட்டமிடும் கழுகினால் கீழே உள்ள அனைத்தையும் விரிவாக காண இயலும். ஆனால் அது தன் இரையான இறந்த சடலங்கள் மட்டுமே காணும். அதே போலத்தான காங்கிரசிற்கும் இறந்து போன மோகன்தாசு காரம்சாந் காந்தி, இறந்து போன இந்திரா காந்தி, இறந்து போன ராசீவ் காந்தியை விட்டால் இவர்களுக்கு பேச ஒன்றும் கிடையாது.
இது போல பல உதாரணங்களை அக்கட்சியின் குறுகிய மணப்பான்மையினை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு துணை முதல்வர் இறுதிவரை நின்று அனைவருக்கும் அவரே வழங்குகிறார் இது தி.மு.க.வின் பரப்புரை. இதே து.மு ஒரு முறை தொலைக்காட்சியில் செய்தி படிக்கும் பெண் ஒருவரை கீழ்தரமான எண்ணத்துடன் துரத்தியதை தமிழகம் அறியும். இப்படிப்பட்ட ஒன்று நின்று கொண்டு கொடுப்பது எதற்காக?

அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஆ.இராசாவைப்பற்றி கருணாநிதி, “குற்றம் சாட்டப்பட்டால் குற்றவாளியா?” என்றார், “விசாரணை நடத்தினால் குற்றவாளியா?” என்றார், “சிறைப்படுத்தப்பட்டால் குற்றவாளியா?” என்கிறார், “தண்டணை வழங்கினால் குற்றவாளியா?” என்பார். குற்றவாளி என்றால் இவர் அகராதியல் என்ன பொருளோ?

தமிழுணர்வு இயக்கங்களுக்கான பொறுப்புகள்

தமிழகத்தின் தந்தையான ஈ.வே.ராமசாமிப் பெரியாரின் கூறியபடி அரசியல் கட்சிகள் என்றாலே அவர்கள் ஓட்டுப் பொறுக்கிகள். இந்த ஓட்டுப் பொறுக்கிகள் ஓட்டுக்காக எதையும் செய்வார்கள். தற்போது தமிழுணர்வு கட்சிகள் தன்னம்பிக்கை இல்லாமல், மற்ற கட்சிகளுக்காக காவடி தூக்கிக் கொண்டு உள்ளன. எனவே இதை கருத்தில் கொண்டும், மக்களின் மனநிலை, அவர்களை கையாள்வது என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட செயல் திட்டவடிவம்.

தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை - ௨௩௪ (234)

தி.மு.க கூட்டணியில் உள்ள தமிழுணர்வுக் கட்சிகள் வி.சி., பா.ம.க மற்றும் சில இக்கூட்டணியில் இணைந்து இருப்பதால் ஒரு ஆதாயம், போட்டியின்றி வீழ்த்தும் வாய்ப்பு உள்ளது. மொத்தம் உள்ள தொகுதியில் ௧௮௰ (180) தொகுதிகள் வரை தி.மு.க, காங்கிரசு போட்டியிடும். மீதமுள்ள சுமார் ௫௰ (50) தொகுதிகளில் இக்கட்சிகள் போட்டியிடும். இந்த ௫௰ (60) தொகுதிகளில் தமிழுணர்வு இயக்கங்கள், தமிழின இரண்டக கட்சியான திமுக மற்றும் தமிழின எதிர்ப்பு கட்சியான காங்கிரசிற்கு எதிரான பரப்புரை தேவைப்படாது.

அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் உள்ள ம.தி.மு.க மற்றும் சில கட்சிகளுக்கும் இதே போல ௬௰ (60) சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும். ஒரு நிபந்தனையின் பேரில் தொகுதி பங்கீடு செய்ய வேண்டும். அது தி.மு.க கூட்டணியில் உள்ள தமிழுணர்வு கட்சிகளின் போட்டியிரும் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க வில் உள்ள தமிழுணர்வுகட்சிகள் போட்டியிடக்கூடாது. குறைந்த பட்சம் இந்த அடிப்படையிலாவது தேர்தலை சந்திக்க வேண்டும். இந்த அடிப்படையில் போட்டியிடுவதால் இரண்டு பலன்கள். இனப்படுகொலைகாரர்களின் பலத்தை போட்டிக் களத்திற்குப் போகும் முன்னரே குறைக்கவும், களத்தில் குறைக்கப்பட்ட தொகுதிகளில் அவர்களின் கோர முகத்தை மக்களுக்கு, ஒவ்வொரு மக்களுக்கும் காட்ட இயலும். மொத்தமாக ௧௰௰ (100)க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் போது புதிய அணியாக உருவாக வாய்ப்பு உள்ளது. (இந்த நிலையைக் கையாளும் போது தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஒன்றிணைந்து சதி செய்யவும் வாய்ப்புள்ளது).

இதைவிடுத்து தனியாக பொது வேட்பாளர் என்றால், மேலும் பிரிந்திருப்பது நமது பலவீனத்தை காட்டுவது மட்டுமல்ல மக்கள் மேலும் குழம்பி, ஓட்டுக்கள் பிரிந்து இனப்படுகொலைகாரர்களுக்குச் சாதகமாக அமையும். இது கருணாநிதியின் சூழ்ச்சிகளில் ஒன்று என்பதை உணர வேண்டும். சில சிக்கல் மிகுந்த இக்கட்டான சூழ்நிலைகளில் மிகப் பொறுமையாக சாதுரியமாக சகிப்புத்தன்மையும் நகர்வுகளை நகர்த்த வேண்டியுள்ளது.

தமிழகத்தின் தற்போதைய அவசரத் தேவை

தமிழகத்தின் தற்போதைய அவசரத் தேவை அரசியலில் தமிழ் உணர்வு ஒருங்கிணைப்பு. ஈழப்போர் முடிவுற்றதும் இங்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் உருவாகியுள்ளது. இவற்றின் நோக்கம் தமிழ் “தேசியம்”-உம் ஆகும். வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல்-௨௰௧௧ (2011) ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு காரணமாக காங்கிரசு கட்சியும் அப்படுகொலையை கண்டுகொள்ளாத திராவிடக் கட்சியான தி.மு.க ஒரே கூட்டணியில் இருந்தாலும் அக்கூட்டணியில் விடுதலைச் சிறுத்தையும் இடம் பெறுவதும்.

மேற்படிப் படுகொலைகள் நடந்து கொண்டிருந்த போது “போரின் போது மக்கள் கொல்லப்படுவது இயல்பான ஒன்று” என அறிக்கை விட்ட அ.இ.அ.தி.மு.க உடன் ம.தி.மு.க என பிளவுபட்டு நிற்கின்றன தமிழ் இன உணர்வு கட்சிகள்.

ஈழத்தில் நடைபெற்ற இனப்படு கொலைக்கு ராசபட்சே, சோனியா, மன்மோகன்சிங், பிரணாப் முகர்சி, ப.சிதம்பரம், கருணாநிதி, E.V.K.S. இளங்கோவன் மற்றும் தங்கபாலு மட்டுல்ல காரணம். இங்கு உள்ள தமிழ் இன உணர்வு கட்சிகளான ம.தி.மு.க., வி.சி, பா.ம.க. போன்ற கட்சிகளுக்கும் பங்கு உள்ளது என்பது வரலாற்று உண்மை. இந்த தமிழ் உணர்வுக் கட்சிகள் தங்களுக்கிடையே ஒரு ஒருங்கிணைப்பிணை ஏற்படுத்திக் கொள்ளாமல் தங்களுடைய தனிப்பட்ட ஆதாயத்திற்காக குறுகிய மனப்பான்மையினால் பிரிந்து இருந்தமையே ஈழ இனப்படுகொலைகாரர்களுக்கு வாய்ப்பாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் இப்படுகொலையை தனக்கு சாதகமக்கிக் கொள்ளவே போட்டி போடுகின்றன என்பது அசிங்கமான, அவலமான உண்மையாக உள்ளது. தியாகி முத்துக் குமாரின் வேண்டுகோளான முத்துக் குமாரின் உயிராயுத்தை மழுங்கடித்து, அவனது தியாகத்தை உதாசீனப்படுத்தி அவனது மரணத்தை தனக்கு சாதகமாக்க துடிக்கும் கட்சிகளே இங்கு உள்ளன. விடுதலைச் சிறுத்தைகள், ஈழத்தைப் பற்றி இவர்கள் மட்டுமே பேச வேண்டும் என்று வன்முறைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய, படுபயங்கர, கொடூர, அப்பட்டமான இனப்படுகொலை, தன் இனத்திற்கு நடந்த பிறகும் இவர்கள் பிரிந்தே இருக்கின்றார்கள். இனப் படுகொலைகாரர்களோடுதான் கூட்டுச் சேர்கின்றனர். தமிழ் உணர்வு கட்சிகள், தனியே கூட்டணி அமைத்து நிற்க துணிவுமில்லை தன்னம்பிக்கையும் இல்லை. காரணம் சாதி என்ற குறுகிய கண்ணோட்டம். சாதியத்தை ஏற்படுத்திய ஆரியத்தை எதிர்க்ககூடிய இவர்கள், அந்த ஆரியர்கள் ஏற்படுத்திய சாதியத்தை எதிர்க்க, துறக்க துணிவில்லை.

தமிழ் உணர்வு கட்சிகளின் பிரிவு தமிழக மக்களை மிகப் பெரிய குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கருணாநிதியின் சூழ்ச்சியே மக்களை குழப்பி அதில் ஆதாயம் தேடுவது (உ.ம் ஏழையின் பங்களா பாரீர் என காமராசர் மீதே அவதூரான பரப்புரை), எதிராளியின் கட்சியில் பிளவை(வுகளை) ஏற்படுத்தி அதன் மூலம் தன் பலத்தை தக்க வைத்துக் கொள்வது. இதைத் தெரிந்தும் இவர்கள் பிளவுபட்டு நிற்பது கருணாநிதியின் பலத்தையும், தமிழ் உணர்வு கட்சிகளின் பலவீனத்தை அல்லது தன் ஆதாயத்திற்காக மொழியுணர்வைப் பயன்படுத்திக் கொள்வதைக் காட்டுகிறது.

அறவழிப் போராட்டத்தின் அடையாளமான திலிபன், பட்டினிப் போரட்டம் நடத்தி தன் உயிரை விடுதலைக்காக விதைத்ததும் ஈழத்தில் பெருங்கலவரமோ வன்நிகழ்வுகளோ நடைபெறவில்லை. மாறாக இந்தியாவின் உண்மை நிலையை உலகிற்கு உணர்த்தி, எதிர்காலத்திற்கான நகர்வுகளை நகர்த்த ஆரம்பித்தனர். போராளிகளை ஒருங்கிணைப்பதும் ராசதந்திர நகர்வுகளை நகர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள். ஆனால் இங்கு, தமிழுணர்வு கட்சிகள் ஒவ்வொன்றும் பிரபாகரனைப் பற்றியும் நடத்தி முடிந்த இனப்படு கொலையைப்பற்றி மேடைதோறும் தங்களுடைய ஆதாயங்களுக்காக பேசி வருகின்றன. இந்தப் போக்கானது, பிரபாகரனும் நடத்தி முடிக்கப்பட்டு இனப்படு கொலையும் இவர்களுக்கு மதுவைப் போல மயக்கத்தைத் தான் தருகின்றன.

அரசியல் கட்சிகள் மட்டும் தான் இந்த நிலையா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு தெளிவான, உறுதியான தொலை நோக்கு பார்வையுடன் கூடிய செயல் திட்டம் ஒன்று இருப்பதாக தோன்றவில்லை.

ஈழப் போர் வெளிப்படுத்திய “உலகின் போக்கு”

ஈழவிடுதலைப் போரின் முடிவு பல உண்மைகளை உலகிற்கு அறிவித்திருக்கிறது. மனித இனத்தின் வளர்ச்சி என்பது காட்டுமிராண்டி காலம் தொடங்கி நாகரீக உலகம் என்ற நிலைக்கு பல்வேறு வடிவங்களில் வளர்ச்சி பெற்றது. அதில் ஒன்று மனிதனை மனிதன் கொன்று தின்ற நிலையில் இருந்து மனிதனை மனிதன் அழிப்பதே தவறு என்ற நிலைக்கு மாறியது. அதன் வெளிப்பாடாக மனித உரிமை அமைப்புகளின் வளர்ச்சியும் அதன் மனிதாபமான நோக்கமும் அமைந்திருந்தது. ஆனால் இந்த இனப்படுகொலை மீண்டும் காட்டுமிராண்டி காலத்திற்கு மனித இனம் திரும்பவும் வேகமாக சென்று கொண்டிருப்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது. மனித உரிமை மீறல், போர் குற்றம் இழைத்தல் போன்றவற்றை தட்டிக் கேட்க வேண்டிய ஐ.நா அவையும் அமைதியான நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. போர்க் குற்றம் குறித்து விசாரணை நடத்துவது போல நாடகமாடிக் கொண்டிருக்கிறது. உலகில் எந்த ஒரு மனித உரிமை அமைப்பினாலும், இனபடுகொலை பற்றி முன்பே அறிவிக்கப்பட்ட நிலையிலும், கண்முன்னே நடந்து கொண்டிருந்த போதும் எந்த ஒரு தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. உலகின் காவலனாகக்காட்டிக் கொள்ளும் அமெரிக்காவும் அமைதியான வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. “அமைதியாக” நின்று வேடிக்கை பார்த்ததற்காக அதன் அதிபர் பராக் ஒபாமாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதோ? ஈழ இனப்படுகொலை மட்டுமல்ல Wiki Leaks என்ற இணைதளம் வெளிக் கொணர்ந்த செய்தியும் அதுவே.

ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல இந்திய தமிழர்களும் அடிமைவாழ்வையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் வெளிப்பட்டிருக்கிறது. இந்தியா ஒரு சனநாயக நாடு என்ற போலித் தோற்றம், ப.சிதம்பரம் பாராளுமன்றத்தேர்தல்-௨௰௰௯(2009)-ல் அடைந்த படுதோல்வியை, வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டதிலிருந்தும் வைகோ பெற்ற வெற்றியை தோற்றதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஈழத்தமிழர்களுக்கு விடுதலைக்காக போராடும் உணர்வு இருக்கிறது. ஆனால் இந்தியத் தமிழர்கள் அடிமைகளாக மட்டுமல்ல கோழைகளாக மூளை மழுங்கடிக்கப்பட்ட, அறிவு, உணர்வு குன்றிய மனிதர்களாக, குறுகிய கண்ணோட்டம் கொண்ட மனித விலங்குகளாக வடிவமைக்கப்பட்டுள்ளதும் வெளிக்காட்டப்பட்டுள்ளது.