வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

மக்கள்

வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகக் காத்திருக்கும் சாதாரண மனிதர்கள். இவர்கள் ஒரு அநீதி அல்லது அத்துமீறல் நிகழும் போது அதற்கு தனக்குத் தானே சாக்குப் போக்குச் சொல்லியோ, சமாதானம் சொல்லியோ அல்லது மறைந்து நின்று தனக்குள்ளேயே திட்டிக்கொண்டோ தனது அன்றாடப் பணிகளைச் செய்யச் சென்றுவிடுவர். அநீதிக்கு எதிராக போராடத் தோன்றாது அல்லது துணிவிருக்காது. இவர்கள், சட்டம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே கடைப்பிடிப்பர். காலத்தின் தேவையைக் கருதி சட்டத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றாது. உதாரணமாக “இந்த சாலை வழியாகத் தான் செல்ல வேண்டும்” என்று சட்டம் சொன்னால் அந்த சாலையில் தான் செல்வார்கள். சாலை சீராக இருக்கும் வரை சரி, காலப் போக்கிலோ, இயற்கையின் இடர்பாட்டின் காரணமாகவோ பழுதடைந்தால் மாற்றுச் சாலையில் செல்லலாம் என்று இவர்களுக்குத் தோன்றாது. மாறாக அந்த சாலையில் சென்று கையையோ காலையோ உடைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று, அங்கு கூடியிருக்கும் இவரைப் போன்றோரின் கூட்டத்தைப் பார்த்து, இவ்வளவு பேர் வருகிறார்களே, கூடுதல் மருத்துவர்களை ஏற்பாடு செய்யவில்லை என்று புலம்பிக் கொண்டும் தங்களுக்குள்ளே திட்டிக் கொண்டும் கூற வேண்டியவர்களிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல் அமைதியாக காத்திருந்து, முடிந்தால் மருந்துவம் பார்த்துவிட்டுச் செல்வர்.

௧௰௰ (100) பேர் கூடியிருக்கும் ஒரு இடத்தில் ஒரு மனிதனை ௨(2) பேர் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்து, தாக்கப்படும் மனிதனுக்காக பரிதாபப்படுவார்கள். ஆனால் ஒன்றிணைந்து தாக்கும் மனிதனை தட்டிக் கேட்கும் துணிவிருக்காது. நூறு பேரில் ஐந்து பேர் ஒன்றிணைந்தால் போதும், அந்த இருவர் இருக்கும் இடம் தெரியாது. ஆனால் தன்நலன் காரணமாக அமைதியாக நின்று வேடிக்கை பார்ப்பார்கள். தன்னம்பிக்கை அற்றுப் போய் எண்ணங்களும் குறுகிப் போய்விட்டது மக்களுக்கு.

தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைபற்றி மட்டுமே சிந்தித்து அதற்காக உழைத்துக் கொண்டும், தான் தன் குடும்பம் என்று வாழும் இவர்கள் தன் இனத்தின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்களை பல தலைமுறைகளுக்கு கொண்டு செல்பவர்கள். இம்மக்களுக்கு தன்னம்பி்க்கையையும், ஒருங்கிணையும் பண்பையும் வளர்க்க வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக