செவ்வாய், 26 மே, 2015

எது நல்ல பள்ளி - வாங்க பேசலாம் மின் நூலின் பதில்அரசு பள்ளி என்றும் தனியார் பள்ளி என்றும் இரு வகைப் படுத்தியுள்ளீர்கள். ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டிருக்கலாம்

தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் அரசு பள்ளி ஆசிரியர்களே என்று குறிப்பிட்டுள்ளீர்.  தகுதியின் அளவு கோலாக நாம் எடுத்துக் கொள்வது கல்வித் தகுதி மட்டுமே.  ஆனால் உடல் தகுதி, உளவியல் தகுதி போன்ற தகுதிகளும் உள்ளன. அவை குறித்து நாம் கண்டுகொள்வதே இல்லை. இதில் குறிப்பாக உளவியல் தகுதி கிட்டத்தட்ட அனைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கிடையாது.

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு சேர்ந்த உடனே அவர்களுக்கு பணி ஓய்வு பெற்ற மனநிலைக்கு வந்து விடுகின்றது.  “மணியடிச்சா சாப்பாடு மயிர் மொளச்சா மொட்டை” என்பது போல தேதியான சம்பளம் வாரமான, வருடமான விடுமுறை என்ற அளவில் முடக்கப்பட்டு விடுகின்றனர்.

ஆசிரியர் பணி மட்டுமல்ல அனைத்து அரசு சார்ந்த பணிகளுக்கும் அந்தந்த பணி சார்ந்த தகுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை.  முழுக்க முழுக்க தன் கட்சி சார்ந்த, ‘தேவை’ சார்ந்த தகுதிகளைப் பார்த்துதே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எனவே அப்பணியின் முக்கியத்துவம் குறித்த புரிதலோ அக்கரையோ இல்லாதவர்களே வந்து ‘ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்’. அந்த புரிதலும் அக்கரையுள்ளவர்கள் தானாகவே “புறந்தள்ளப்படுகின்றனர்”.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைவிற்கு காரணமாக நான் என் அனுபவத்தில் கண்டது ஆசிரியர்களே. இது குறித்த பதிவை http://thiruvidam.blogspot.in/2013/07/blog-post.html இல் தெரிவித்துள்ளேன். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித்தகுதி இல்லை என்றாலும் அவர்களுக்கு என்று கண்காணிப்பு உள்ளது. ஆனால் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எந்த வித கண்காணிப்பும் இல்லை. அப்படியே இருந்தாலும் அது பெயரளவில் மட்டுமே உள்ளது. இந்த நிலை அரசுப்பள்ளி என்று மட்டுமல்ல அரசின் அனைத்துத் துறைகளிலுமே இதே நிலை. இதற்கு அடிப்படைக்காரணம் இரண்டு.  1) தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் பணியாளர்களாக இல்லாமல் கட்சியினராக இருப்பது.  2) மக்கள் கண்காணிக்காமல் இருப்பது.(இது குறித்து ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது)

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களுக்கென்று சங்கங்களை அமைத்துள்ளனர். பல்வேறு போராட்டங்களை நடத்தி தங்களுடைய கோரிக்கைகளை பெற்றுள்ளனர்.  அவற்றில் ஏதேனும் ஒன்றாவது அரசுப்பள்ளிகளின், துறையின் மேம்பாடு குறித்து உள்ளதா என்றால் ஒன்று கூட கிடையாது.  அவர்கள் போராடியது முழுக்க தன்னுடைய தனிப்பட்ட சுகத்திற்கானதாக இருக்கிறது. நலன் என்பதற்காக என்றால் கூடப் பரவாயில்லை சொகுசிற்கும் சுகத்திற்குமாக “நலன்” என்ற பெயரில் போராடுகின்றனர்.  பணி நேர குறைப்பு, ஊதிய உயர்வு, வேலை நேர குறைப்பு, குற்றத்திற்கு இழைத்தால் அதற்கு தண்டனை தவிர்க்கு என்ற அளவில் மட்டுமே உள்ளது.  ஊழியர் என்றால் தன்னலன் பாராமல் உழைப்பது என்று பொருள். ஆனால் ‘அரசு ஊழியர்கள்’ என்றால் முதலாளி மனோபாவம் வந்து விடுகிறது. மற்ற எதைப்பற்றியும் கவலைப்படாமல் இலாபத்தை மட்டுமே குறிக்கோளால செயல்படுவது முதலாளித்துவம்.  அரசுத்துவம் என்பது மற்ற எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் தன் சுகத்திற்காகப் மட்டுமே பணிக்கு என்ற பெயரில் சேருவது என்ற நிலை.

அத்தியாயம் 5ல் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.  ஆட்சியாளர்கள் ஆசிரியர்களை நியமிப்பதே மக்களுக்கு கல்வி வழங்க என்று இருந்தால் தானே. தன்னுடைய  மற்றும் கட்சியின் வருமானத்திற்கும், தனக்கான அடிமைகளைப் பெருக்கிக் கொள்ளவும் என்பதாகத் தானே உள்ளது.

அசிரியர்கள் இல்லாத அவல நிலை இது குறித்து http://thiruvidam.blogspot.in/2013/07/blog-post.html பதில் குறித்துள்ளேன்

அத்தியாயம் 8
நரியூர் ஊராட்சி பள்ளி ஆசிரியரிடம் உள்ள அக்கரையில் பொறுப்பில் ஆயிரத்தில் ஒன்று பகுதிகூட தாய்மொழி ஆய்வு கட்டுரை எழுதும் எழுத்தாளர்களுக்கு, ஆர்வலர்களுக்கு இல்லை.  அப்பள்ளி ஆசிரியரின் சேவையை பயன்படுத்தி தனக்கான ஆதாயத்தைத் தேடிக் கொள்கின்றனர்.  அது பணமாகவோ விளம்பரமாகவோ இருக்கலாம்..  அக்கரை, பொறுப்பு என்பது ஒரு அடியேனும் முன்னோக்கி வைப்பதாக இருக்க வேண்டும்.  எட்டு அடி பின்னோக்கி வைத்து விட்டு பின் புலம்பித் தீர்க்க அல்லது ஆதாயம் தேட மட்டுமே எழுத்தைப் பயன்படுத்துவதாக உள்ளது.

அத்தியாயம் 9
கல்வி அமைச்சர் அதை தெரிவித்தார் இதை தெரிவித்தார்,  அதெல்லாம் இருக்கட்டும் நீதிமன்றங்களே இன்று எப்படி உள்ளது? காவல் துறை எப்படியுள்ளது? சட்டங்களும் விதிகளும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது. ‘’ஏட்டுசுரைக்காய் கறிக்கு உதவாது’’ நமக்கான தேவைகளை நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் நரியூர் ஊராட்சி பள்ளி ஆசிரியர் போல சிறிய அளவிலான முயற்சியை மாவட்டத்திற்கு ஒருவர் செய்தாலே போதுமானது. அது வளர்ந்து விரிந்துவிடும். அதற்கு ஆர்வலர்கள் தேவையான பணிகளை செய்ய வேண்டும்.  இங்கு தான் சிக்கலே. ‘தன்னை’ முன்னிலைப்படுத்துவதிலேயே அதீத ஆர்வமும் முயற்சியும் நோக்கமுமாக இருப்பதால் மற்றவர்களின் கருத்தும் தேவையும் புறந்தள்ளப்பட்டு உதாசீனப்படுத்தப்படுகிறது.  ஆழாமாக விவாதித்து ஒரு குறைந்த பட்ச உடன்பாடை ஏற்படுத்தி அடுத்த கட்ட நகர்விற்கான பணிகளை செய்வதில்லை.  தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள சம்பளமில்லா வேலைக்காரர்களாகவும், அடிமைகளாகவுமே ஆர்வலர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பார்வை https://www.facebook.com/notes/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/503920279692973

தொலைகாட்சி விளம்பரங்களினால் பெற்றோர் குற்ற உணர்விற்கு ஆளாகிறார்கள்.  இது உளவியல் ரீதியாக பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது. மேலும் இந்த நிலை தனி நபரை குறை சொல்ல முடியாது.  சமூகக் குறையே.   தனக்கென ஆதரவு இல்லாத நிலையில் கிடைத்ததை வைத்து கேட்டதை வைத்து முடிவெடுக்க வேண்டிய நிலையில் தான் இருக்க முடியும்.  திருமணமாகும் வரை அனைத்து விதங்களிலும் தோள்கொடுக்கும் சகோதர சகோதரிகள் திருமணத்திற்குப் பிறகு அப்படியே நேரெதிர் நிலைக்கு மாறும் போது ஆதரவற்ற நிலையிலும் இதுவே போட்டி மனநிலைக்கும் தள்ளப்படுவதாலும் உளவியல் ரீதியாக தன்னுடைய நிலை என்ன.? நமக்கான தேவை என்ன என்று நிதானமாக சிந்திக்க இயலாது.  எப்படிப்பட்ட சாதாரண மனிதனுக்கும் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்த ஒரு வெளி தேவைப்படுகிறது.  ஆனால் இன்று உள்ள சூழ்நிலையில் ஒவ்வொருவருக்கும் கேட்க நேரமில்லை சொல்லித்தீர்க்க வண்டிக்கணக்கில் ஆதங்கங்கள் அடக்கி வைத்திருக்கின்றனர்.  கிடைத்தவன் தலையில் கொட்டிவிட்டு ஓடிவிடுகின்றனர்.  மற்றவர்களின் மன ஆதங்கத்தை கேட்பதில்லை.  இதில் பொருளாதார அல்லது ஏதேனும் ஒரு வகையில் பலவீனமானவர்கள் சிக்கி மேலும் மேலும் பலவீனமடைகின்றனர். கொட்டிவிட்டு ஓடியவர்களும் அதிலிருந்து மீளாமல் மீண்டும் மீண்டும் கொட்டிக் கொண்டே இருக்கின்றனர்.  இது ஒரு சமூக நோயாகிவிட்டது.

பெற்றோர் தங்களின் மனநிலையை மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.  எப்படி இது சாத்தியமாகும் அவர்களை சிந்திக்கவே விடுவதில்லையே?


முதலில் இன்றைய கல்விமுறையே நமக்கானது இல்லை அது மெக்கலேவால் உருவாக்கப்பட்ட அடிமைகளை குமாஸ்தாக்களை உருவாக்கவும், ஆங்கிலேயர்கள் உயர்ந்தவர்கள் ஆங்கிலம் உயர்ந்தது என்பதை நோக்கமாகவும் கொண்டு உருவாக்கப்பட்டது. மூலகாரணமான இந்த கல்விமுறை குறித்து ஆராயாமல் இன்றைய கல்விமுறை குறித்து ஆராய்வது தும்பை விட்டு வால்பிடிப்பது போன்றதாகவே இருக்கும்.  மேலும் இந்த அடிமைகளுக்கான கல்விமுறையில் கற்றவர்களே இன்றைய பெற்றோராக இருப்பதால் அவர்களால் அடிமைமுறையே சிறந்ததாக, பெருமைக்குறியதாக கருத இயலும். என்னதான் தாய்மொழிக் கல்வி குறித்து பக்கம் பக்கமாக, புத்தகம் புத்தகமாக எழுதினாலும், எழுதுபவர் கூட ஆங்கில வழி கல்வியையே தன்னுடைய குழந்தைகளுக்கு அளிக்கின்றனர்.  அதற்கு அவர்கள் கூறும் சாக்குப் போக்கு தமிழும் படிகிறன்றனர். பன்மொழிதிறன் உடையவர்களாக இருக்கின்றனர். என்று பெருமை பட்டுக் கொள்கின்றனர்.  இவ்வாறு தாய்மொழியின் தேவை குறித்து ஆய்ந்து புத்தகம் எழுதும் எழுத்தாளர்களே இந்த அழகில் இருக்கும் போது சாதாரண சாமானியர்கள் அவ்வெழுத்தாளர்களை முன்மாதிரியாக கொண்டவர்களின் நிலை????  இந்த இழி நிலைக்குக் காரணம் தன்னம்பிக்கை அற்ற எழுத்தாளர்களாக இருப்பதாலும் எழுத்தாளர்களை வெறும் எழுத்தாளர்கள் என்ற அளவில் மட்டும் அவர்களைப் பார்க்காமல் முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதாலும், தாய்மொழிக்கல்வியை தன் குழந்தைகளுக்கு போராடி கொடுப்பவர்களை உதாசீனப்படுத்துவம் மிக மிக முக்கிய காரணமாக இருக்கிறது. (http://thiruvidam.blogspot.in/2013/07/blog-post.html இந்த பதிவின் பின்னூட்டத்தில் உள்ள செய்திகளைப் பார்க்கவும்)

மற்ற சில பதிவுகள் 

புதன், 31 ஜூலை, 2013

வறுமையின் எல்லைக் கோடு

திட்டக்கமிசன் இந்தியாவில்  கிராமப்புறத்தில் 27க்கு மேலும் நகரங்களில் 33 மேலும் வருவாய் ஈட்டினால் வறுமைக் கோட்டுக் மேலே இருப்பதாக கணக்கிட வேண்டும் என கூறியுள்ளது.

வறுமைக் கோட்டின் எல்லைக் கோட்டை எந்த அடிப்படையில் தீர்மாணித்தார்கள் என்ற விளக்கம் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

வறுமைக் கோட்டுக்கான எல்லைக் கோட்டை குறிப்பிட்ட ரூபாயாக நிர்ணயிப்பதைவிட தன்னுடைய வருவாயில் எவ்வளவு விழுக்காடு உணவிற்காகவும்,  எவ்வளவு விழுக்காடு மற்ற அத்தியவசியத் தேவைக்காகவும் செலவு செய்கிறார்கள் என்ற அடிப்படையில் கணக்கிட்டால் சரியாக இருக்கும்.

உதாரணத்திற்கு
பட்டிக்காட்டில் ஒருவரின் மாதவருமானம். (ஆண்டின் சராசரி) 3000.00

3,000.00 100.00%    வருமானம்.
1500.00 -50.00%    உணவிற்கு
500.00 -16.00%    வீட்டுவாடகை
500.00 -16.00%    உடை மற்றும் இதர அத்தியாவசிய செலவினங்கள் 
200.00 -6.66%   போக்குவரத்து
200.00 -6.66%   மருத்துவம்

எனக் கணக்கிட்டால் ஓரளவு கணிக்க இயலும்.

இதில் நகர்ப் புறங்களில் உணவிற்காகும் செலவைக் காட்டிலும் போக்குவரத்து மற்றும் உடைக்கான செலவு அதிகமாக இருக்கும். காரணம் அவரின் பணியின் தன்மையைப் பொருத்து. 

மேலும் ஒருவரின் வருமானத்தை எத்தனை பேர் சார்ந்திருக்கிறார்கள். என்பதைப் பொருத்தும் வறுமைக் கோட்டின் எல்லை மாறுபடும்.

இது போக கடனுக்கான வட்டியும் சேர்க்க வேண்டியுள்ளது  (இந்தியாவில் அனைவரும் கடனானிகளாக மாறிக் கொண்டிருப்பதால்)

சனி, 20 ஜூலை, 2013

தாய் மொழிவழிக் கல்வியின் காலன்கள்

கடந்த "ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வஞ்சிக்கப்படும் பள்ளிக்கல்வி" என்ற கட்டுரையில் தமிழக அரசு அவசரமாக வேறு மொழிமூலம் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதையும் அதன் விளைவுகளையும் குறித்து எழுதியிருந்தேன்.

இன்றைய காலகட்டத்தில் அரசு என்பது அரசியல் கட்சிகளுக்கு அதிகாரம் வழங்கும் அமைப்பாக உள்ளது.  அரசியல் கட்சிகளோ நமது விவசாய நிலங்களை கூறுபோட்டு விற்கும் மனிதர்களும் கல்விநிறுவனங்களை நடத்தும் நிர்வாகிகளும் தலைவர்களாகக் கொண்டுள்ளது.  எனவே மேற்கண்ட பதிவின்படி அரசு தாய் மொழியை காக்கும் என்று எதிர்பார்ப்பது தவறானது, அதற்கு வாய்பே இல்லை.  தாய்நிலத்தையே கூறு போட்டு விற்பவர்களா மொழியை காக்க வளர்க்கப் போகிறார்கள்? சமூக இயக்கங்களும் அமைப்புகளுக்கும் சமூக/இன ஆர்வலர்களுக்கும் தான் இந்தப் பொறுப்பு உள்ளது. ஆனால் அவைகளோ தொலைநோக்குப் பார்வை இல்லாமல் குறுகிய கண்ணோட்டத்தோடு  தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன.

மேற்கண்ட பதிவில் குழந்தைகள் எந்த மொழியில் கற்றால் சிறப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சாதாரண பொது மக்களோ இவ்வாறு பகுத்து ஆராய்ந்து துணிந்து முடிவு எடுக்கக் கூடியவர்கள அல்ல.  இதனைப் பயன்படுத்தி மக்களை குழப்பி சிந்திக்க விடாமல் தனது கல்வி நிறுவனத்தில் பிள்ளைகளை சேர்க்க வைக்கின்றனர். எந்த பன்னாட்டு நிறுவனமும் சதித் திட்டம் தீட்டி வேறு மொழிமூலம் கல்வியை புகுத்தவில்லை.  காரணம் தமிழகம் தவிர்த்து வேறு எங்கும் இவ்வளவு மோசமான நிலையில்லை.  ஒரு வேளை பன்னாட்டு நிறுவனங்கள் சதித் திட்டம் தீட்டியிருந்தால் ஏன் மற்ற மாநிலங்களை தவிர்த்து தமிழகத்தில் மட்டும் புகுத்த வேண்டும்? அது போல L. P. G தாரளமயமாக்கல் தனியார்மயமாக்கல் உலகமயமாக்கல் கொள்கையினால் விளைந்த விளைவாகவும் இதை எடுத்துக் கொள்ள இயலாது. மேற்கண்ட ...மயமாக்கல் தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பொருந்தும். அது மட்டுமல்ல உலகத்திற்கே இது பொருந்தும். இந்த சூழ்நிலையில் தான் சீனாவும் ....மயமாக்கியுள்ளது.  ஆனால் சீன அரசு அரசின் இணையதளங்கள் அனைத்திலும் தற்போது சீனத்தை தவிர்த்து வேறு மொழியில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளதாக செய்தி உள்ளது. எனவே தாய்மொழிக் கல்வியை ஒழித்தது ....மயமாக்கலோ, பன்னாட்டு நிறுவனங்களின் சதியோ அல்ல.  இங்கு அதிகாரத்தில் உள்ளவர்களின் பணத்தாசை. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கினால் பணம் கிடைக்கும் என்று சகட்டு மேனிக்கு தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனியார் பள்ளி நிறுவனங்கள் இலாபம் பார்க்க வேறு மொழிக் கல்வி ஆடம்பர கட்டமைப்பு வசதிகள் என்று தனது பள்ளியை மார்கெட்டிங் செய்ததன் விளைவு இது. அதை தட்டிக் கேட்வேண்டிய சமூக இயக்கங்களும் அமைப்புகளுக்கும்  சமூக/இன ஆர்வலர்களுக்கும் அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வெற்று அறிக்கைகளோடு அடையாளத்தை பதிவு செய்து விட்டு தன் பிள்ளைகளை அதே தனியார் பள்ளிகளில் வரிசையில் நின்று சேர்த்துவிட்டனர்.

பொதுவாக சாதாரண பொது மக்கள் ஆழ்ந்து ஆராய்து பார்ப்பவர்கள் கிடையாது.  தனக்கு முன் பகட்டாக ஒருவர் எதைச் செய்தாலும் அதைப் போல செய்யவேண்டும் என்று செய்பவர்கள்.  உதாரணமாக ரஜினி கையை வைத்து ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான் சேட்டை செய்ததும் அதைப்பார்த்து அப்படியே தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் செய்வதைப் பார்த்திருப்போம்.  அதே போல இங்கு உள்ள தொழிலதிபர்கள் உயர் அதிகாரிகள் அனைவரும் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருப்பதால் ஆங்கிலம் தெரிந்தால் உயர் அதிகாரியாக ஆகலாம், தொழிலதிபராகலாம் என்று எண்ணுகின்றனர். அது மட்டுமல்ல சமூக/இன ஆர்வலர்களுக்கு சமூக செயல்பாட்டு வட்டத்தில் ஆங்கிலத்தில் பேசுவதும் ஆங்கிலம் தெரிந்தவர் மட்டுமே முன்னிலையில் இருப்பதும் வழக்கத்தில் உள்ளது. ஆங்கிலம் தெரிந்தவர்களை முக்கியமான விவாதத்தின் போது தன் அருகில் வைத்துக் கொள்வதுமாக உள்ளது.  இந்த நிலையில் ஆங்கிலம் தெரியாதவர்கள் புறக்கணிக்கப்படுவது அல்லது களப் பணிகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வதுமாக உள்ளது.  இவற்றை கவனிக்கும் சாதாரண பொது மக்கள் எப்படி தாய்மொழிக் கல்வியை தேர்ந்தெடுப்பார்கள்.?

மேலும் தொழில்கள் வளர்ந்து கொண்டுள்ள இந்த நிலையில் தொழிலுக்குத் தேவையான் அனைத்துத் தகவல்களும் ஆங்கிலத்தில் வைத்துக் கொள்வது அல்லது ஆங்கிலத்தில் தான் பெறுமுடியம் என வழக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் நிறுவனங்களில் பணிபுரியும் சாதாரண தொழிலாளர் அதிகாரிகள் தன்னிடம் காட்டும் அதிகார தோரனை பார்க்கும் போது, நிறுவனத்தில் பயன்பாட்டில் ஆங்கிலம் உள்ளதை பார்க்கும் போதும் அவர்களுக்கு மோகம் ஏற்படுவது இயற்கையே. இந்த சூழலில் ஆர்வலர்கள் எவ்வளவு தான் எடுத்துக் கூறினாலும் அவர்களின் ஆழ்மனதில் பணிபுரியுமிடத்தில் ஏற்பட்ட பாதிப்புகளே அவரை முடிவெடுக்க வைக்கும்.  ஆர்வலர்களோ இந்த சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் உபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.  உபதேசம் செய்யக்கூடியவர்கள் யாரேனும் நல்ல பொருளாதார நிலை வலுவாகவும் ஆங்கிலம் தெரியாமலும் உள்ளார்களா என்றால் இல்லை.  ஒன்று ஆங்கிலம் தெரிந்திருப்பார்கள் அல்லது பொருளாதார சூழ்நிலையில் பலவீனமாக இருப்பார்கள். ஆங்கிலம் தெரிந்தவர்கள் "தமிழில் படிக்கவை நான் 10 வகுப்புவரை ஆங்கிலமே தெரியாது பிறகு கற்றுக் கொண்டேன்" என்று கூறினால் உடனே அவர்கள் மனதில் "நீ 10 வகுப்பிற்குப் பிறகு கற்றதை நான் முதல் வகுப்பு முதலே கற்றவைக்கிறேன்" என்று கூறிக்கொள்வார். மேலும் ஆங்கிலம் தெரிந்ததால் தான் தனக்கு உபதேசம் செய்கிறாய் என்ற எண்ணமும் ஓடும். ஆங்கிலம் தெரியாத பொருளாதார நிலை பலவீனமானவர் எதையும் கூற இயலாது.  கூறினாலும் சரி உன் நிலை என்ன என்ற கேள்விதான் முதலில் வரும் அது நியாயமானதும் கூட. மேலும் உலகில் யாராவது உபதேசத்தை ஏற்பவர்கள் உண்டா? யாருக்காவது உபதேசம் பண்ணிணால் பிடிக்குமா?  நான் உட்பட என் தந்தை கூறினாலும் கூட கேட்பதில்லை.  எனது அனுபவத்தின் அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கிறேன்.  அதே போல மக்களுக்கும் எவ்வளவுதான் கூறினாலும் சரி சரி என்று கேட்டுக் கொள்வார்களே அன்றி தன்னைடைய வாழ்க்கைக்குத் தேவை என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மேலும் நம் மொழி குறித்து பேசும் போது விடுதலைப் புலிகள் அனைத்துத் தகவல்களையும் தமிழில் மொழிபெயர்த்து பிறகு தமிழில் தான் பயன்படுத்துவார்கள் என்று பெருமையாகப் பேசிக்கொள்கின்றனர்.  ஆனால் இங்கு நடைமுறைப்படுத்த முயற்சிபதில்லை அவ்வளவு ஏன் அதைப் பற்றி சிந்திப்பது கூட கிடையாது. ஆங்கிலம் என்பது மொழி அதை எளிதில் கற்றுக் கொள்ளலாம் என்று உபதேசிப்பதற்கும் ஆங்கிலத்தின் தேவையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கும் வேறுபாடு உள்ளது. நடைமுறையில் ஆங்கித்தின் தேவையை குறைக்காத வரை ஆர்வலர்களின் பேச்சு "குறைப்பிற்குச்" சமம்.

தற்போது உள்ள தொழில் நுட்பங்கள் இதற்கான சாத்தியக் கூறுகளை உருவாக்கியுள்ளது. முன்னால் ஈராக் அதிபர் சதாம் உசேன் கைது செய்யப்பட்ட போது ஐ.நா. படைத் தளபதி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பத்திரிக்கையாளர்கள் ஈராக்கிய மொழியில் கேட்டார்கள் ஆனால் இராணுவத் தளபதிகள் ஆங்கிலத்தில் விடையளித்தார்கள்.  எந்த மொழி பெயர்ப்பாளர்கள் இல்லை. அது பொறிமயமாக்கப்பட்டிருந்தது.  இனிவரும் காலங்களில் மொழிபெயர்ப்பு என்பது ஒன்றுமில்லாத்தாகிவிடும் எனவே அவரவர் அவரவர் மொழியிலேயே இருக்கலாம். 

எனது பணி கணினி செயலியாக்கம் உருவாக்கும் பணியாகும். இதில் உள்ள coding அனைத்தும் ஆங்கிலத்தில் தான் இருக்கும் ஆனால் coding-க்கான குறிப்புகள் (Commands) ஆங்கிலத்தில் எழுதுவதற்க்குப் பதில் தமிழில் எழுதுகிறேன். தொழிலதிபர்களாக உள்ள தாய் மொழி ஆர்வலர்கள் தங்கள் அலுவலகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் தமிழில் கையாளும் போது அங்கு பணியாற்றும் அனைவருக்கும் ஆவணங்கள் எளிதாகப் புரியும். எனவே உயர் அதிகாரிகளின் ஆங்கிலப் பூச்சண்டி வேலை செய்யாது.  சாதாரண மக்களுக்கும் ஆங்கிலம் தேவை என்ற மாயை தகர்ந்து போகும்.  இப்படி தமிழில் ஆவணப்படுத்தும் போது, கற்பதற்கு மட்டுமல்ல தொழிலுக்கும் தமிழ் அவசியமாகிறது. இதை உணர்ந்து தொழிலதிபர்களாக உள்ள தாய் மொழி ஆர்வலர்கள் நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும். நிறுவனத்தின் தொழிலாளராக அல்லாமல் ஒப்பத்த முறையில் தாய் மொழி ஆர்வலர்களை சிறு சிறு தொழிலதிபர்களாக உருவாக்க வேண்டும்.  இதைப் போன்ற ஆக்கப் பூர்வமான முறையில் மொழியைக் காப்பது பயன் தருமேயன்றி வேறு பிரச்சாரங்கள் புத்தக விற்பனையை மட்டும் ஏற்படுத்தும்..

வெள்ளி, 19 ஜூலை, 2013

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வஞ்சிக்கப்படும் பள்ளிக்கல்வி

இந்தக் கட்டுரையில் எனது அனுபவத்தை தெரிவித்து அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தொடர்ந்து விவரிக்கிறேன்.

இந்த கல்வியாண்டு (2013-14) எனது மகனை தாய் மொழியில் கல்வி கற்க கோவை தீத்திபாளையத்தில் உள்ள தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்சேர்த்தேன். ஆனால் தற்போது அரசின் அவசர ஆணையின் பேரில் அனைத்துப் பள்ளிகளிலும் வேறு மொழி மூலம் கல்வியை அறிமுப்படுத்தினார்கள்.  இதற்கு அப்பள்ளியில் குறைவான எண்ணிக்கையில் வகுப்பறைகள் இருந்ததால் கல்விக்குழு (!?) மற்றும் பெற்றோரிடம் 27.06.2013 அன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டபோது அக் குழுவின் தலைவர் (அப்பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியர்) மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒருதலை பட்சமாக தீர்மானம் எழுதிக் கொண்டார்கள்.  அதாவது வேறு மொழி மூலம் கல்வியை அறிமுகப்படுத்துவது பெற்றோர் விரும்பினால் தமிழில் தொடருவது என்று.

கூட்டத்தின் போது அக்குழுவின் தலைவர் "இது நல்ல வாய்ப்பு இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.  அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக "இது நல்ல வாய்ப்பு அல்ல இது விரிக்கப் படும் சதிவலை இதில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளவேண்டுமேயன்றி சிக்கிக் கொள்ளக்கூடாது " என்று கூறினேன்.  அதற்கு அவர் "எனது பிள்ளைகளை இதே பள்ளியில் தான் படிக்க வைத்தேன். அதன் பலனை இன்று அனுபவிக்கிறேன்" என்று தெரிவித்தார்.  அதற்கு நான் "பலன் என்றால் நல்ல பலனா அல்லது மோசமான பலனா?" என்றதும் அவர் மழுப்பலாக் "அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்" என்றார்.  அதற்கு நான் "அப்படியென்றால் அதைப் பற்றி இப்பொழுது ஏன் பேச வேண்டும்" என்று கேட்டேன். பதில் கூறாமல் தீர்மானம் என்ன எழுத வேண்டும் என்று பஞ்சாயத்து துணைத் தலைவருடன் சேர்ந்து கூறிவிட்டு சென்று விட்டனர்.  இதே கூட்டத்தின் போது ஆசிரியர்கள் அரசின் இந்த அவசரத் திட்டத்தில் உள்ள மிகமுக்கியமான தீமைகளைப் பற்றி கூறினர்.  இப்பள்ளியில் உள்ள பிள்ளைகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட (SC/ST) மக்களின் பிள்ளைகள். அவர்கள் தங்கள் பிள்ளைகள் எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என்று கூடத் தெரியாது. இந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று மட்டும் தான் கூறத் தெரியும் என்றும் மேலும் பிள்ளைகள் பள்ளி முடிந்து வீட்டுச் சென்றதும் பையை வீட்டில் எங்கேயோ வைத்து விட்டு அடுத்த நாள் பள்ளிக்கு வரும் போதுதான் தேடுவார்கள் இந்த நிலையில் அவர்களை வேறு மொழி மூலம் கல்வி கொடுக்கும் போது அது அந்த மாணவர்களும் பெரும் வெறுப்பைத் தரும் என்ற கருத்தைத் தெரிவித்தனர். ஆனால் இதையும் தீர்மானத்தில் தெரிவிக்காமல் மறைத்து விட்டனர் கல்விக் குழுவினர். அப்பொழுது அங்கு வந்த கல்வித்துறை அதிகாரி பெண் (AEO-Assistent Educational Officer) ஒருவர் வந்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் குறைந்துள்ளதால் ஆசிரியர்கள் வேறு இடங்களுக்கு மாற்றல் செய்ய வேண்டிவரும் எனவே அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க தனியார் கல்வி நிறுவனங்களைப் போல வேறு மொழி மூலம் ஆரம்ப கல்வியை அறிமுப்படுத்தியதாக் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது எனது எதிர்ப்பைத் தெரிவித்து கருத்தைக் கூறிய போது தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்றும் அரசு தான் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த ஆணை பிறப்பித்துள்ளதாக கூறினார்.  நான் எனது எதிர்ப்பை எழுத்து மூலம் அளிப்பதாகக் கூறி விடைபெற்றேன்.  

பிறகு எனது கருத்தை 01.07.2013 தேதியிட்ட கடிதம் மூலமாக தெரிவித்து தலைமை ஆசிரியையிடம் அளித்து கடிதம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை கேட்ட போது ஒப்புகை (Acknowledgment) கொடுக்கக் கூடாது என்று தெரிவித்து விட்டு கடிதத்தைப் பெற்றுக் கொண்டார். ஆனால் இன்று பள்ளிக்கு சென்று விசாரித்ததில் அனைத்து மாணவர்களையும்  வேறு மொழி மூலமாக கல்வி கற்கவைக்கப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.  எனது மகனைத் தவிர மற்ற 29 மாணவர்களும் வேறு மொழி மூலம் கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

மேற்கண்ட கூட்டத்தின் போது ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும் போது இந்த ஆண்டு முதல் வகுப்பில் சேரும் பிள்ளைகளில் பலர் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தாரின் பிள்ளகளின் இடை நிற்றல எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும். இதனால் அவர்களின் சமூக மேம்பாடு என்பது கானல்நீராகும். மேலும் அடுத்த பத்தாம் (2023-2024) கல்வி ஆண்டில் நடைபெறும் அரசுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் பெரும் சரிவை சந்திக்கும்.

மேற்கண்ட அரசின் அவசர திட்டத்திற்கு பொறுப்பற்ற கல்விக் குழுக்களும் கல்வித்துறை அதிகாரிகளும் காரணமாகின்றனர். எனது மகன் பயிலும் பள்ளியில் உள்ள கல்விக் குழுவானது ஒடுக்கப்பட்ட மக்களின் தற்கால நிலை மற்றும் அந்த மக்களின் எதிர்காலம் குறித்து எந்தவித அக்கரையும் காட்டாமல் ஒருதலை பட்சமாக தீர்மானத்தை எழுதியுள்ளனர். கல்வித்துறை அதிகாரிகளும் மாணவர்களின் திறன் மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்து ஆராயாமல் ஆசிரியர்களின் பணியை பாதுகாக்கும் ஒரே நோக்கத்துடன் இந்தத் திட்டத்தை அரசிடம் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.  இந்த அதிகாரிகள் அரசுப் பள்ளிகளில் எந்தப் பள்ளியில் முழுமையான மாணவர் சேர்க்கை நடந்துள்ளது என்று ஆராயவே இல்லை.  காரணம் கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகள் முன்புவரை முழுமையான சேர்க்கை நடந்துள்ளதாக அறிகிறேன்.  காரணம் அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது 100% ஆக இருந்தது.  அப்பள்ளியை முன் மாதிரியாக கொண்டு செயல்படுவதை விட்டு விட்டு தப்பிக்க செய்த சூழ்ச்சியாகத் தெரிகிறது.

அரசின் இந்த அவசரத் திட்டம் என்பது அதிகாரிகளின்/கல்விக்குழுக்களின் அலட்சியப் போக்கே காரணம் என்றும், இந்தத் திட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை முறியடிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

காகிதப்புலிகளும், போராட்ட ஆர்வலர்களும் தங்கள் பிள்ளைகளை வசதியான தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு, வெளியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கண்ணீரைக் காட்டுவார்கள்.  தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் துணிவு இல்லாதவர்கள் அரசை எதிர்க்க துணிவு வந்துவிடுமா என்ன?

---------------------------------------------------------------------------------------------------------------------------------
தலைமை ஆசிரியருக்கு அனுப்பிய கடிதம்.

28/06/2013
தீத்திபாளையம்.
அனுப்புனர்,
      மாணிக்கம்.க,
      2/182 ஆர்.கே.வி. கோல்டன் நகர்,
      தீத்திபாளையம்,
      கோயமுத்தூர்641010.

பெறுநர்,
      உயர்திருதலைமை ஆசிரியர் அவர்கள்,
      தொ.ஊ.ஒ.தொடக்கப்பள்ளி
      தீத்திபாளையம்,
      கோயமுத்தூர்641 010.

மதிப்பிற்குறிய அம்மையார்,
     
பொருள்;   தொ.ஊ.ஒ.தொடக்கப் பள்ளிதீத்திபாளையத்தில் ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தல் குறித்து

பார்வை ;   எனது மகன் திருவிடச் செல்வன் முதல் வகுப்பு தொ.ஊ.ஒ.தொடக்கப்பள்ளிதீத்திபாளையம்.

நேற்று(27.06.2013) தங்களின் அழைப்பின் பேரில் அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆங்கில வழி கல்விஅறிமுகப்படுத்தும் அரசின் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டத்தில் தங்கள் பள்ளிமாணவனின் தந்தை என்ற முறையில் கலந்து கொண்டேன்.

கூட்டத்தில்அரசு அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தும் திட்டம்குறித்து விளக்கி அதன் பொருட்டு ஆலோசனை நடத்தப்பட்டது. இது குறித்து எனதுகருத்துக்களை இங்கு கூற கடமைப்பட்டுள்ளேன்.

கல்விஎன்பது சிந்திக்க வைத்து அறிவை வளர்க்க வழிகாட்டுவது.  அது தாய்மொழி வழியாக இருப்பின் குழந்தைகள் புரிந்துகற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும்.  இதற்குஆதாரமாக பலர் நம்முடைய சமூகத்தில் சான்றாக உள்ளனர்.  முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்.  சந்திராயன் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரைஆகியோர் தாய் மொழிக் கல்வியையே சிறந்தது என்றும் கூறுகின்றனர்.

எந்தமொழியையும் எந்த வயதிலும் கற்றுக் கொள்ள முடியும் ஆனால் சிந்திப்பதைக் கற்றுக்கொடுக்க ஏற்ற வயது ஆரம்பக் கல்வி வயது. இலக்கியத்திற்காக இந்தியாவிலிருந்து நோபல் பரிசு பெற்ற இரவீந்தரநாத் தாகூர்அவர்கள் 40 வயதிற்கு மேல் தான் ஆங்கிலத்தை கற்றார். எனவே சிறு வயதில் வேறு மொழியின்மூலம் கல்வி என்பது குழந்தைகளுக்கு பெரும் சுமையாகும்.

தாய்மொழியில் சுமாராக படிக்கும் மாணவனால் வேறு மொழிவழிக் கல்வியில் படிக்கும் போதுஅந்த மாணவனால் முற்றிலுமாகக் கல்வியின் மீது வெறுப்பு ஏற்படுகிறது.  தாய்மொழி வழியில் பயிலும் போது இயல்புவாழ்க்கையோடு இருப்பதால் இயல்பாக கருத்துக்களை உள்வாங்கி சிந்தித்து மாற்றுக்கருத்துக்களை உருவாக்க வழி செய்கிறது.  அதுமாறாக வேறு மொழி வழியில் கற்கும் போது சிந்திக்க எதுவும் இல்லாமல் வெறும்மனப்பாடம் செய்யும் மனிதனாகவே உருவாகிறான். நிறுவனங்களுக்கு தேவையான மனிதஎந்திரமாக உருவாக்கப்படுகிறான். தாய் மொழிக் கல்வி தன்னம்பிக்கையை உருவாக்கும்.மாற்று மொழிக் கல்வி தன்னம்பிக்கையை உருக்குலைப்பதாக உள்ளது.

அரசின்இந்தத் திட்டம் குறித்து நட்பு வட்டத்தில் விவாதித்த போது அரசுப் பள்ளிகளில் கல்வியின்தரம் குறைவாக இருப்பதாலும், தனியார் பள்ளிகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களாலும்பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளின் சேர்த்து விடுகின்றனர் என்றகருத்து கூறப்பட்டது.

“அரசுப் பள்ளிகளுக்குப் போட்டியாக தனியார்பள்ளிகள்” என்ற நிலை மாறி சிறுசிறு பள்ளி நிறுவனங்களைப்பார்த்து, அவைகளுக்குப் போட்டியாக “வேறு மொழிக்கல்வி” என்ற தனது திட்டத்தைஅறிவிக்கும் போக்கு என்பது அரசு பள்ளிகளின் இயலாமையையே காட்டுகிறது.தனியார் பள்ளிகளில் பயிற்சி பெறாத தகுதியற்றவர்களையே பெரும்பாலும் ஆசிரியராகநியமிக்கப்படுகின்றார்கள். ஆனால்  அரசுப்பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் நன்கு பயிற்சி பெற்ற தகுதி உடைய ஆசிரியர்களேநியமிக்கப்பட்டு உள்ளனர்.  இப்படி உள்ளநிலையில் தகுதியற்றவர்களோடு, பயிற்சி பெற்று தகுதியோடு உள்ளவர்கள் தோற்றநிலையைக் காட்டுகிறது.

நமதுநாட்டில் மற்ற மாநிலங்களில் ஆரம்பக் கல்வி என்பது தாய்மொழிக் (அம்மாநிலத்தின்)கல்வியாக உள்ளது.  ஆனால் நமது தமிழ்நாட்டில் நிர்வாகச் சீர்கேட்டின் காரணத்தால் வேறு மொழிக் கல்விபரவலாக்கப்பட்டுள்ளது. இங்கு IAS IPS போன்ற போட்டித் தேர்விற்கு ஏற்ற மாணவர்கள் மிகஅரிதாகி வருகின்றனர்.  இங்கு உள்ள IAS IPS போன்ற பதவிகளுக்கு வேறு மாநிலத்தவர்களேமிகுந்துள்ளனர்.  மேலும் இதனால் IIT போன்ற அதிஉயர் கல்வி பயில தகுந்த மாணவர்களைஉருவாக்குவதில்லை. பள்ளிப் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவதோடுநின்றுவிடுகிறது. இயல்பு வாழ்க்கையோடு ஒன்றவிடாமல் தனித்து வாழவே பழக்குகிறது. ஆரம்பக்கல்வி என்பது அந்த மாணவனின் எதிர்காலத்தை வழிநடத்தக் கூடியது. எனவே சாதாரண ஏழைமாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக தன்னம்பிக்கையோடு வளர தாய்மொழிக்கல்வியைதொடர்ந்து  மேலும் மேம்படுத்த வேண்டும். எனவேவேறு மொழிமூலம் கல்வி என்ற திட்டத்தை அறிமுகப்படுவத்துவதற்குப் பதிலாக அரசுப் பள்ளிகளின்தரத்தை மேம்படுத்துவது எப்படி? மாணவர் சேர்க்கை குறைவதை தடுப்பது / உயத்துவதுஎப்படி என ஆலோசிப்பது சிறந்தது. “புலியைப்பார்த்து பூனை சூடு”போட்டக் கொள்ளட்டும்.  ஆனால்பூனையைப் பார்த்து புலி தன் காலை வெட்டிக் கொள்ள வேண்டாம் எனகேட்டுக் கொண்டு, “வேறு மொழி மூலம் கல்வி”என்ற திட்டத்திற்கு எனது கடும் எதிர்ப்பை மிகத் தாழ்மையுடன் பதிவு செய்து கொள்கிறேன்.
நன்றி

இப்படிக்கு

மாணிக்கம்.க

செவ்வாய், 17 ஜனவரி, 2012

காலச்சுவடின் வன்மம்


http://www.kalachuvadu.com/issue-145/page14.asp

//ஆரம்பத்தில் பிரபாகரனை, இந்தியா எந்தவகையிலும் நிராகரித்திருக்கவில்லை. ஆனால் ஒரு தீர்வுக்குள் கொண்டுவரவே எத்தனித்தது. ஆனால் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகள் உண்மையான தேவைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கும் தயாராக இருந்ததாகவே சில பதிவுகள் கூறுகின்றன. விடுதலைப் புலிகளின் தேவை ஒரு நடைமுறை ஈழ அரசு (De-facto-State) என்றாலும், அது குறித்துக் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் தயாராக இருக்கிறேன் - இவ்வாறு முரசொலி மாறனிடம் ராஜீவ் காந்தி குறிப்பிட்டிருக்கிறார் (டி. பி. எஸ். ஜெயராஜ்). வட இந்தியத் தலைவரான ராஜீவ் காந்தியால் இந்தளவு இறங்கிவர முடிந்திருக்கிறது. ஆனால் மறுபுறமாகப் புலிகள் பக்கத்தில் அது குறித்துப் போதுமான நெகிழ்ச்சியோ புரிதலோ இருந்திருக்கவில்லை. இதற்காக இந்திய அமைதிப் படை பொதுமக்களுடன் நடந்து கொண்ட முறைகளை, இந்தக் கட்டுரையாளர் ஏற்பதாக அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. சில தவறுகள் இடம்பெற்றுள்ளன என்பதை மறுக்ககவுமில்லை.//

மேற்கண்ட பத்தியில்
//வட இந்தியத் தலைவரான ராஜீவ் காந்தியால் இந்தளவு இறங்கிவர முடிந்திருக்கிறது. //
பிறகு

//இந்திய அமைதிப் படை பொதுமக்களுடன் நடந்து கொண்ட முறைகளை, இந்தக் கட்டுரையாளர் ஏற்பதாக அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. சில தவறுகள் இடம்பெற்றுள்ளன //
என்று குறிப்பிடுகிறார்.

இதிலிருந்த தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று இந்தியாவின் வழிகாட்டு நூலான மனுநீதி சாஸ்திரப்படி சூத்திரனுக்கு எந்த உரிமையும் கிடையாது. பிராமணன் ஏதாவது கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம். இதை மீறுகிற பட்சதத்தில் அவனைக் கொல்லலாம். அந்த அடிப்படையில் சூத்திரனான பிரபாகரன் எந்த உரிமையையும் கேட்கக் கூடாது. எதைக் கொடுக்கலாம் என்று முடிவு செய்ய வேண்டியது ராசிவ். ராசிவ் சொன்னதைக் கேட்காத பிரபாகரனையும் பிரபாகரனை ஆதரித்த மக்களையும் கொல்லலாம். அது தவறல்ல அவ்வாறு மக்களைக் கொன்ற போது இந்திய இராணுவத்தினர் பின்வாங்கியது பலரை இழந்தது. ஆயுதங்களைப் பறி கொடுத்தது இவைதான் இந்திய அமைதிப்படை செய்த சில தவறுகள். சிறு குழந்தைகள் இளம் பெண்கள் வயதான பெண்கள் என்ற பாகுபாடின்றி பாலியல் பயங்கரவாத்தை நடத்தி கொன்றது ஒன்றும் தவறல்ல. ஏனென்றால் அவர்களெல்லாம் சூத்திரர்கள். யாழ்பாண மருத்தவமனையில் புகுந்து நோயுடையோர் மருத்துவர் என்று ஒருவர் கூட மிச்சமில்லாமல் கொன்றது தவறே அல்ல. பிரபாகரனைக் கொல்ல இந்தி்ய அமைதிப்படையின் தளபதியான ஹர்கிரத் சிங் என்பவரிடன் பிரபாகரனைக் கொல்லக் கூறியதும் பார்வையில் படக்கூடாத செய்திகள்.

ராஜபக்சே உள்நாட்டு விவாகரங்களில் அந்நிய நாடுகளின் தலையீட்டை விரும்பவில்லை அவர் அதை நிராகரித்திருக்கிறார். ஆனால் இந்தியா தனது வல்லாதிக்கத்தைப் பயன்படுத்தி ராஜபக்சேவை மிரட்டி பணியவைத்து தனது குறிக்கோளை நிறைவேற்ற ஆரம்பித்தது. பிறகு இந்தியாவின் பிடியில் இருந்து விலக சீனா பாகிஸதான் போன்ற இந்திய எதிர்ப்பு நாடுகளிடம் உறவை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தது. அந்த அடிப்படையில் இந்தியாவின் அதிகாரம் செல்லாக் காசாகிப் போனது.. மேலும் இனப்படுகொலைக்கு இந்தியாவே காரணம் என்பதற்கான சான்றுகள் இலங்கையின் வசம் இருப்பதால் தனது வாலை சுருட்டி இலங்கைக்கு கட்டுப்பட்டு உள்ளது. வலியச் சென்று நிதி உதவி செய்கிறது. இலங்கையை இனப் படுகொலைக் குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்ற போராடுகிறது. இந்த அப்பட்டமான உண்மைகளை மறைக்க இந்திய அரசின் முயற்சிக்கு ஒரு ஒத்துழைப்பு இந்த கட்டுரை.

மேற்கண்ட கட்டுரையில் புலிகளைப்பற்றிய விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த செய்திகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இல்லை. இக்கட்டுரையிலேயே நார்வேவின் துர்துக் குழு என்பது இந்தியாவின் பினாமி என்று கூறப்பட்டுள்ளது. எனவே அது இந்திய ஆதரவு என்ற நிலையிலேயே இருக்கும். நேர்மைதன்னை இருக்காது

எனவே இந்த மதிப்பீடு என்பது இந்திய அரசின் மதிப்பீடாகவே காணமுடிகிறது.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

தனித்தமிழகம்

இன்றைய சூழல்நிலையில் தனித்தமிழகத்தின் அதன் வாய்ப்புகள், மற்றும் சிக்கல்கள் குறித்து சில ஆய்வுகள்.

தனித் தமிழக முழுக்கத்தை தந்தை பெரியார், இந்திய விடுதலைக்கு முன்பே வைத்திருந்தார். அது முடக்கப்பட்டு, தற்போது ஈழத்தமிழர் இனப்படு கொலைக்குப் பின் மீண்டும் உருவெடுத்துள்ளது. அன்று அந்நிய நாட்டு வெள்ளையர்களிடமிருந்து, ஒன்றிணைக்கப்பட்டிருந்த இந்தியா, ஒன்று பட்டு போராடி அந்நிய நாட்டானை வெளியேற்றியது. ஆனால் தற்போது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு என்ற நிலையில்லை. உரிமைக்கான விடுதலை, இனப்பாதுகாப்பு என்ற நிலை. இது, அரசுகளைப் பொறுத்த வரை பிரிவினைவாதம் பயங்கரவாதம். இந்த உரிமைக்கான விடுதலை, இனப்பாதுகாப்பிற்கான போர்களை ஒடுக்க அனைத்து அரசுகளும் வரிந்து கட்டிக் கொண்டு ஒன்றிணைந்து, ஒடுக்கி நசுக்கி அழிக்கும். மக்களின் பாதுகாப்பு மற்றும் தேவைகளுக்காக அரசுகள் என்ற நிலை மாறி அதிகார வெறியர்களின் (அரசின்) பாதுகாபிற்காக மக்கள் என்றுள்ளது.

தற்போது இந்தியாவில் ௨௮ (28) மாநிலங்கள் உள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தனிநாட்டு கோரிக்கைகளை வைத்துள்ளன. இந்த மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, ஒரே அணியாக நின்று, ஒரே குரலில் கோரிக்கை வைக்கும் போது அது வலிமை உள்ளதாக இருக்கும். தனித்தனியாக வைக்கும் போது அக்கோரிக்கைகள் வலுவிழந்து போகிறது. தற்போது தமிழகத்திற்கும் கருநாடகத்திற்கும் இடையே காவேரி நதிநீர் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதன் காரணமாக இரு நாடுகளிக்கிடையே (மாநிலங்களுக்கு) கசப்புணர்வு உள்ளது. இரு நாடுகளும் இந்தியாவிடமிருந்து விடுபட விரும்புகின்றன. இந்த இரு நாடுகளும் தங்களின் கசப்புணர்வை ஒதுக்கி வைத்து, முதலில் ஒன்றிணைந்து இந்தியாவிடமிருந்து விடுபட வேண்டும். இல்லையேல் இந்திய இறையாண்மை, இந்த கசப்புணர்வை மேலும் மேலும் வளர்த்து, நிரந்தர அடிமைகளாகத்தான் வைத்திருக்கும்.

தற்போது இந்தியா போர்க் கருவிகள், உளவு அமைப்புகள் பொருளாதாரம் ஆகியவற்றில் வலுவாக உள்ளது. பிரிய வேண்டிய நாடுகளிடம் அது வலுவாக இல்லை, இருக்கக்கூடியதும் இந்தியாவின் பிடியில் உள்ளது. உலக மயமாக்கலுக்குப் பின் அரசியல்வாதிகளின் பார்வை மிகக் குறுகிப் போய்விட்டது. பணமனநோய் பீடித்திருக்கிறது. எனவே அரசியல்வாதிகளின் பார்வையில், ஒரே இந்தியாவாக இருக்கும் போது தான் எண்ணவே முடியாத அளவிற்கு கொள்ளையடிக்க முடியும். சிறு நாடுகளாகப் பிரிந்தால் அடிக்கும் மிகக் குறைந்த அளவே கொள்ளையடிக்க முடியும் என்பதால் அதற்கு முட்டுக் கட்டையாக இருப்பார்கள்.

சீனா போன்ற ஆதிக்க வெறி கொண்ட நாடுகள் நம் மீது ஆக்கிரமிப்பு செய்யும் வாய்ப்பு உள்ளது. தற்போது பிரிந்துள்ள சூடானுக்கு மேற்குலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காரணம் தெற்கு சூடானில் உள்ள எண்ணை வளத்தைத் தாரைவார்த்தது மற்றும் மதம் சார்ந்த காரணங்களுக்காக ஆதரவு தெரிவித்துள்ளன. இக்கோணத்தில்பார்க்கும் போது நமக்கு ஆதரவு என்பது கேள்விக் குறியே. ௨௫ (25) ஆண்டுகளுக்கும் மேல் போராடிய, உலகின் மிகச் சிறந்த விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ௨௩ (23) உலக நாடுகள் ஒன்றிணைந்து மிகப் பெரிய இன அழிப்போடு முடக்கியுள்ளனர். ஒவ்வொரு இன விடுதலையின் போதும் மிகப் பெரிய இப்படுகொலைகள் நடத்தப்படுவதும் நடந்து கொண்டு உள்ளன. ஆனால் யூதர்கள் தனி நாடு அமைக்க தன் இனத்தை பலி கொடுக்கவில்லை இனப்படுகொலை காரணமாக தனி நாடு என்ற கருத்து எழுந்தது. மிகச் சாதுர்யமாக, தங்களுக்கு என தனி நாட்டை அமைத்துக் கொண்டார்கள்.

மேற்குலக நாடுகளின் ஆதரவின்றி தனி நாடு என்பது மிகப் பெரிய சவால இருக்கிறது. மேற்குலக நாடுகளின் ஆதரவு வேண்டுமெனில், தனி நாடு அமைப்பதினால் ஏதேனும் ஒரு வழியில் அவர்களுக்கு ஆதாயம் இருக்க வேண்டும். இல்லையெனில் விடுதலைப் போருக்கு (உட்நாட்டு) மறைமுகமாக உதவிக் கொண்டு ஆயுத விற்பனையில் ஆதாயம் தேடி, பன்னெடுங்காலமாக போர்களை நடத்திக் கொண்டே இருப்பார்கள். நம்மிடம் எண்ணை வளம் இல்லை. தண்டகாரன்யா காடுகளில் உள்ள கனிம வளத்தை இந்திய அரசே, அந்த நாடுகளுக்கு ஒப்படைத்து விட்டது. அங்கு போராடும் அமைப்புகள், அவ்வளங்களை அந்த நாடுகளிடமிருந்து மீட்கவே போரை நடத்துகின்றன. இந்த நிலையில் மேற்குலக நாடுகள் இந்தியாவோடு இணைந்து, போராடும் அமைப்புக்களை நசுக்கி அழிக்கும்.

மனித வளம் இல்லாமல் இயற்கை வளங்களை பயன்படுத்த இயலாது. நம்மிடம் உள்ள மனித வளத்தை சீர்படுத்தி அதன் மூலம் நகர்வுகளை நகர்த்தலாம். மற்ற நாட்டு மக்களைவிட இந்திய நாடுகளில் உள்ள மக்களுக்கு அறிவுத்திறன் கூடுதல். ஆனால் ஒரு ஒழுங்கு கிடையாது. தன்னம்பிக்கை, உயர்ந்த மனப்பாங்கு, தன்னடக்கம் (சுய கட்டுப்பாடு) குறைவு அல்லது இல்லை.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் முதல் வரிசையில் ஒவ்வொரு தனித்தனி எண்ணாக எடுத்துப் பார்த்தால் மிகக் குறைந்த மதிப்பு கொண்டவை ஆனால் தகுதிக்கு தக்கவாறு வரிசையாக வைத்தால் அதன் மதிப்பு ௧௧௰௰ (1100).

இரண்டாவது வரிசையில் தகுதியை சிறிது மாற்றினால் அதன் மதிப்பு குறைகிறது.

மூன்றாவதாக வரிசையில் தனித்த மதிப்பில் உயந்த எண்ணை ஈற்றில் வைக்கும் போது அதன் மொத்த மதிப்பு மேலே உள்ள மதிப்புகளுடன் ஒப்பிட்டால் மிகக்குறைவு. இதே எண்ணில் சரியான படி வரிசைப்படுத்தினால் மற்ற இரு மதிப்புகளை விட மிக அதிகம்.

ஆனால், இறுதி வரிசையில் உள்ளபடி வைத்தால் ஒரு எண் என கூற இயலாது. மதிப்பை இழந்துவிடுகிறது. தனித்தனியாக, அதனதன் கோணத்தில் வைத்து மதிப்பிட முடியுமே அற்றி ஒன்றிணைத்து மதிப்பிட இயலாது. இதில் மூன்றாவதாக உள்ள எண் ஒன்பதா ஆறா எனக் கூற முடியவில்லை. இந்த வரிசையில் உள்ள ஒவ்வொரு எண்ணையும் நேர்படுத்தி, பின் உயர்மதிப்பைப் பெற சரியான இடங்களில் வைக்க வேண்டும். நமது மனித வளத்தின் நிலையும் இறுதி வரிசையில் உள்ளவாறு இருக்கிறது. இக்கடுமையான பணியினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையானது அரசியல், தொழில் வளர்ச்சி என அனைத்து துறையிலும் உள்ளது.

பகுத்தறிவு என்பது இறை மறுப்பு என்பதல்ல. அறிவைப் பயன்படுத்தி பகுத்து ஆராய்ந்து அறிவியலை வளர்த்து வாழ்க்கையை உயர்த்துவது. உளவியல் என்பது தற்போது மருத்துவத்துறையின் ஒரு பகுதி. தற்போது உளவியல் என்ற அறிவியல் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. உளவியல் பார்வையில் நாம் நம்மை ஆராய வேண்டியுள்ளது. பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டிருந்த நம் இனத்திற்கு தன்னம்பிக்கை, உயர்ந்த மனப்பாங்கு, தன்னடக்கம் ஆகியவற்றில் பின்தங்கியுள்ளோம். அதனால் ஆங்கிலத்திற்கு அடிமையாக உள்ளனர் நம் மக்கள். தன் மொழியின் மீது நம்பிக்கையிமில்லை, ஆங்கிலம் கற்கும் துணிவுமில்லை. புலம்பிக் கொண்டே, நிலையில்லாமல் இருக்கின்றனர். மொழியைப்பற்றிய தெளிவு கிடையாது. தன்னம்பிக்கையும் உயர்ந்த மனப்பாங்கும் வளரும் போது இப்புலம்பல்கள் இல்லாமல் தனது திறன்களை வளர்த்து ஒரு ஒப்பற்ற மனித வளம் உருவாகும். இந்த வளத்தின் மூலமாக தொழில்நுட்பங்களையும் தொழில்களையும் கைப்பற்ற வேண்டும். அதன் மூலமும், இனபடுகொலைகளின்றி நாம் நாட்டு விடுதலையைப் பெறலாம்.

ஈழத்தில் ௨௫(25) ஆண்டுகளுக்கு மேல், உலகின் தலைசிறந்த விடுதலை இயக்கம் நடத்தி வந்த விடுதலைப் போர் நசுக்கப்பட்டு, இனமே கிட்டத்தட்ட ஈழத்தில் அழிக்கப்பட்டு விட்டது. இந்த சூழலில், நாம் இருக்கும் நிலையில் நாம் எவ்வளவு காலம் நடத்தப் போகிறோம்? எவ்வளவு பேரை இழக்கப் போகிறோம்?

அரசு நிர்வாகம்

போராளிகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உழைப்பவர்கள். ஆனால் அரசு என்பது ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே ஆன நிர்வாகம் அல்ல. ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கான நிர்வாகம். தமிழகத்தின் தந்தையான ஈ.வே.ரா அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காகக் போராடினார். தொழில்வளர்ச்சி, கலை, இலக்கியம் போன்றவற்றிக்காக அவர் போராடவில்லை (சமூக விடுதலை இல்லையென்றால் இவற்றைப் பெற இயலாது).

ஈழத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன் ஈழ விடுதலைக்காக ஆயுதப் போர் நிகழ்த்தினார். அவரை தீவிரவாத இயக்கத்தின் தலைவர் என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் தான் உலகம் பார்த்தது. ஆயுதப் போரைக் காரணம் காட்டி மற்ற நாடுகள் நட்புறவை வளர்க்கவில்லை. ஆனால் மற்ற நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார். அரசுகள் என்பது மக்களுக்காக என்ற நிலை மாறி அதிகார வெறிகொண்ட மனிதர்களின் கூட்டம் என்பது ப.சிதம்பரத்தின் வெற்றி அறிவிப்பின் மூலமும் Wiki Leaks இணையதளம் வெளியிட்ட ஆவணங்களின் மூலமும் தெளிவாகத் தெரிகிறது. எனவே தொழில் வளர்ச்சி மற்றும் நாட்டுக்குத் தேவையான மற்ற துறைகளில் பெரும் தேக்க நிலையில் இருந்தது. தற்போது பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது ஈழநாடு.

ஆனால் ஒரு அரசு நிர்வாகம் என்பது மற்ற நாடுகளின் அங்கீகாரத்துடன் இருக்கும் பொழுதுதான் தொழில் வளர்ச்சிக்கும் கலை இலக்கிய பரிமாற்றங்களுக்கும் வழிவகுக்கும். அனைத்து துறை மற்றும் அனைத்து இன மக்களுக்காகவும் அதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

தற்காலத்தில் அரசியல் என்பது அதிகாரத்தைப்பயன்படுத்தி பணத்தை கொள்ளையடிப்பது, தொழில்துறையை கைப்பற்றுவது என்பதாக உள்ளது. சமூக நலன் என்பது துளியும் இல்லாது இருக்கிறது. அரசியல் என்பது சாக்கடையல்ல நதிநீர். நதியை துப்புரவாக வைத்துக் கொள்ளாதது நமது பிழை. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தகுதிக்கு தக்கவாறு பதவிகளை வழங்காதது. எடுத்துக்காட்டு கலைஞர் கருணாநிதி. இவர் திரைப்படம் மற்றும் நாடகங்களுக்கு கதை மற்றும் உரையாடல்கள், கவிதை, கலை, இலக்கியங்கள் படைக்கும் படைப்பாளி. இவரை இலக்கிய படைப்பாளியாக மட்டும் வைத்திருந்தால் தமிழ் மொழிக்கு அணி சேர்ந்திருக்கும். ஆனால் இவரின் படைப்புகளில் மயங்கிய மக்கள், தவறுதலாக ஆட்சி அதிகாரத்தை அளித்ததால் பண சேர்க்கும் மன நோய்க்கு ஆளாகி, ஏன் எதற்கு எப்படி சேர்க்கிறோம் என்ற வரைமுறை இல்லாமல் எவ்வளவு உள்ளது என்றே தெரியாத அளவுக்கு கொள்ளையடித்து அடியற்ற வாளியில் நீரை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர் மட்டுமல்லாமல் இவரைச் சார்ந்தவர்களுக்கும் இந்நோயைப் பரப்பி வளர்த்துக் கொண்டிருக்கிறார். இந்த மனநோய் தற்போது உலக மக்கள் அனைவரையும் பீடித்திருக்கிறது. இந்நோயை நோயாகவே பார்க்க மனித இனத்திற்கு தோன்றவே இல்லை. இதன் காரணமாக, இரண்டாம் உலகப் போருக்குபின் நாகரீக வளர்ச்சியடைந்திருந்த மனித இனம், தற்போது மீண்டு்ம் காட்டுமிராண்டி காலத்திற்கு வந்து நிற்பதை ஈழப்படுகொலைகளும், Wiki Leaks இணைய தளச் செய்தியும், இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எல்லையற்ற ஊழல்களும் வெளிப்படுத்தியுள்ளது.