புதன், 31 ஜூலை, 2013

வறுமையின் எல்லைக் கோடு

திட்டக்கமிசன் இந்தியாவில்  கிராமப்புறத்தில் 27க்கு மேலும் நகரங்களில் 33 மேலும் வருவாய் ஈட்டினால் வறுமைக் கோட்டுக் மேலே இருப்பதாக கணக்கிட வேண்டும் என கூறியுள்ளது.

வறுமைக் கோட்டின் எல்லைக் கோட்டை எந்த அடிப்படையில் தீர்மாணித்தார்கள் என்ற விளக்கம் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

வறுமைக் கோட்டுக்கான எல்லைக் கோட்டை குறிப்பிட்ட ரூபாயாக நிர்ணயிப்பதைவிட தன்னுடைய வருவாயில் எவ்வளவு விழுக்காடு உணவிற்காகவும்,  எவ்வளவு விழுக்காடு மற்ற அத்தியவசியத் தேவைக்காகவும் செலவு செய்கிறார்கள் என்ற அடிப்படையில் கணக்கிட்டால் சரியாக இருக்கும்.

உதாரணத்திற்கு
பட்டிக்காட்டில் ஒருவரின் மாதவருமானம். (ஆண்டின் சராசரி) 3000.00

3,000.00 100.00%    வருமானம்.
1500.00 -50.00%    உணவிற்கு
500.00 -16.00%    வீட்டுவாடகை
500.00 -16.00%    உடை மற்றும் இதர அத்தியாவசிய செலவினங்கள் 
200.00 -6.66%   போக்குவரத்து
200.00 -6.66%   மருத்துவம்

எனக் கணக்கிட்டால் ஓரளவு கணிக்க இயலும்.

இதில் நகர்ப் புறங்களில் உணவிற்காகும் செலவைக் காட்டிலும் போக்குவரத்து மற்றும் உடைக்கான செலவு அதிகமாக இருக்கும். காரணம் அவரின் பணியின் தன்மையைப் பொருத்து. 

மேலும் ஒருவரின் வருமானத்தை எத்தனை பேர் சார்ந்திருக்கிறார்கள். என்பதைப் பொருத்தும் வறுமைக் கோட்டின் எல்லை மாறுபடும்.

இது போக கடனுக்கான வட்டியும் சேர்க்க வேண்டியுள்ளது  (இந்தியாவில் அனைவரும் கடனானிகளாக மாறிக் கொண்டிருப்பதால்)

சனி, 20 ஜூலை, 2013

தாய் மொழிவழிக் கல்வியின் காலன்கள்

கடந்த "ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வஞ்சிக்கப்படும் பள்ளிக்கல்வி" என்ற கட்டுரையில் தமிழக அரசு அவசரமாக வேறு மொழிமூலம் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதையும் அதன் விளைவுகளையும் குறித்து எழுதியிருந்தேன்.

இன்றைய காலகட்டத்தில் அரசு என்பது அரசியல் கட்சிகளுக்கு அதிகாரம் வழங்கும் அமைப்பாக உள்ளது.  அரசியல் கட்சிகளோ நமது விவசாய நிலங்களை கூறுபோட்டு விற்கும் மனிதர்களும் கல்விநிறுவனங்களை நடத்தும் நிர்வாகிகளும் தலைவர்களாகக் கொண்டுள்ளது.  எனவே மேற்கண்ட பதிவின்படி அரசு தாய் மொழியை காக்கும் என்று எதிர்பார்ப்பது தவறானது, அதற்கு வாய்பே இல்லை.  தாய்நிலத்தையே கூறு போட்டு விற்பவர்களா மொழியை காக்க வளர்க்கப் போகிறார்கள்? சமூக இயக்கங்களும் அமைப்புகளுக்கும் சமூக/இன ஆர்வலர்களுக்கும் தான் இந்தப் பொறுப்பு உள்ளது. ஆனால் அவைகளோ தொலைநோக்குப் பார்வை இல்லாமல் குறுகிய கண்ணோட்டத்தோடு  தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன.

மேற்கண்ட பதிவில் குழந்தைகள் எந்த மொழியில் கற்றால் சிறப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சாதாரண பொது மக்களோ இவ்வாறு பகுத்து ஆராய்ந்து துணிந்து முடிவு எடுக்கக் கூடியவர்கள அல்ல.  இதனைப் பயன்படுத்தி மக்களை குழப்பி சிந்திக்க விடாமல் தனது கல்வி நிறுவனத்தில் பிள்ளைகளை சேர்க்க வைக்கின்றனர். எந்த பன்னாட்டு நிறுவனமும் சதித் திட்டம் தீட்டி வேறு மொழிமூலம் கல்வியை புகுத்தவில்லை.  காரணம் தமிழகம் தவிர்த்து வேறு எங்கும் இவ்வளவு மோசமான நிலையில்லை.  ஒரு வேளை பன்னாட்டு நிறுவனங்கள் சதித் திட்டம் தீட்டியிருந்தால் ஏன் மற்ற மாநிலங்களை தவிர்த்து தமிழகத்தில் மட்டும் புகுத்த வேண்டும்? அது போல L. P. G தாரளமயமாக்கல் தனியார்மயமாக்கல் உலகமயமாக்கல் கொள்கையினால் விளைந்த விளைவாகவும் இதை எடுத்துக் கொள்ள இயலாது. மேற்கண்ட ...மயமாக்கல் தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பொருந்தும். அது மட்டுமல்ல உலகத்திற்கே இது பொருந்தும். இந்த சூழ்நிலையில் தான் சீனாவும் ....மயமாக்கியுள்ளது.  ஆனால் சீன அரசு அரசின் இணையதளங்கள் அனைத்திலும் தற்போது சீனத்தை தவிர்த்து வேறு மொழியில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளதாக செய்தி உள்ளது. எனவே தாய்மொழிக் கல்வியை ஒழித்தது ....மயமாக்கலோ, பன்னாட்டு நிறுவனங்களின் சதியோ அல்ல.  இங்கு அதிகாரத்தில் உள்ளவர்களின் பணத்தாசை. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கினால் பணம் கிடைக்கும் என்று சகட்டு மேனிக்கு தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனியார் பள்ளி நிறுவனங்கள் இலாபம் பார்க்க வேறு மொழிக் கல்வி ஆடம்பர கட்டமைப்பு வசதிகள் என்று தனது பள்ளியை மார்கெட்டிங் செய்ததன் விளைவு இது. அதை தட்டிக் கேட்வேண்டிய சமூக இயக்கங்களும் அமைப்புகளுக்கும்  சமூக/இன ஆர்வலர்களுக்கும் அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வெற்று அறிக்கைகளோடு அடையாளத்தை பதிவு செய்து விட்டு தன் பிள்ளைகளை அதே தனியார் பள்ளிகளில் வரிசையில் நின்று சேர்த்துவிட்டனர்.

பொதுவாக சாதாரண பொது மக்கள் ஆழ்ந்து ஆராய்து பார்ப்பவர்கள் கிடையாது.  தனக்கு முன் பகட்டாக ஒருவர் எதைச் செய்தாலும் அதைப் போல செய்யவேண்டும் என்று செய்பவர்கள்.  உதாரணமாக ரஜினி கையை வைத்து ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான் சேட்டை செய்ததும் அதைப்பார்த்து அப்படியே தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் செய்வதைப் பார்த்திருப்போம்.  அதே போல இங்கு உள்ள தொழிலதிபர்கள் உயர் அதிகாரிகள் அனைவரும் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருப்பதால் ஆங்கிலம் தெரிந்தால் உயர் அதிகாரியாக ஆகலாம், தொழிலதிபராகலாம் என்று எண்ணுகின்றனர். அது மட்டுமல்ல சமூக/இன ஆர்வலர்களுக்கு சமூக செயல்பாட்டு வட்டத்தில் ஆங்கிலத்தில் பேசுவதும் ஆங்கிலம் தெரிந்தவர் மட்டுமே முன்னிலையில் இருப்பதும் வழக்கத்தில் உள்ளது. ஆங்கிலம் தெரிந்தவர்களை முக்கியமான விவாதத்தின் போது தன் அருகில் வைத்துக் கொள்வதுமாக உள்ளது.  இந்த நிலையில் ஆங்கிலம் தெரியாதவர்கள் புறக்கணிக்கப்படுவது அல்லது களப் பணிகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வதுமாக உள்ளது.  இவற்றை கவனிக்கும் சாதாரண பொது மக்கள் எப்படி தாய்மொழிக் கல்வியை தேர்ந்தெடுப்பார்கள்.?

மேலும் தொழில்கள் வளர்ந்து கொண்டுள்ள இந்த நிலையில் தொழிலுக்குத் தேவையான் அனைத்துத் தகவல்களும் ஆங்கிலத்தில் வைத்துக் கொள்வது அல்லது ஆங்கிலத்தில் தான் பெறுமுடியம் என வழக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் நிறுவனங்களில் பணிபுரியும் சாதாரண தொழிலாளர் அதிகாரிகள் தன்னிடம் காட்டும் அதிகார தோரனை பார்க்கும் போது, நிறுவனத்தில் பயன்பாட்டில் ஆங்கிலம் உள்ளதை பார்க்கும் போதும் அவர்களுக்கு மோகம் ஏற்படுவது இயற்கையே. இந்த சூழலில் ஆர்வலர்கள் எவ்வளவு தான் எடுத்துக் கூறினாலும் அவர்களின் ஆழ்மனதில் பணிபுரியுமிடத்தில் ஏற்பட்ட பாதிப்புகளே அவரை முடிவெடுக்க வைக்கும்.  ஆர்வலர்களோ இந்த சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் உபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.  உபதேசம் செய்யக்கூடியவர்கள் யாரேனும் நல்ல பொருளாதார நிலை வலுவாகவும் ஆங்கிலம் தெரியாமலும் உள்ளார்களா என்றால் இல்லை.  ஒன்று ஆங்கிலம் தெரிந்திருப்பார்கள் அல்லது பொருளாதார சூழ்நிலையில் பலவீனமாக இருப்பார்கள். ஆங்கிலம் தெரிந்தவர்கள் "தமிழில் படிக்கவை நான் 10 வகுப்புவரை ஆங்கிலமே தெரியாது பிறகு கற்றுக் கொண்டேன்" என்று கூறினால் உடனே அவர்கள் மனதில் "நீ 10 வகுப்பிற்குப் பிறகு கற்றதை நான் முதல் வகுப்பு முதலே கற்றவைக்கிறேன்" என்று கூறிக்கொள்வார். மேலும் ஆங்கிலம் தெரிந்ததால் தான் தனக்கு உபதேசம் செய்கிறாய் என்ற எண்ணமும் ஓடும். ஆங்கிலம் தெரியாத பொருளாதார நிலை பலவீனமானவர் எதையும் கூற இயலாது.  கூறினாலும் சரி உன் நிலை என்ன என்ற கேள்விதான் முதலில் வரும் அது நியாயமானதும் கூட. மேலும் உலகில் யாராவது உபதேசத்தை ஏற்பவர்கள் உண்டா? யாருக்காவது உபதேசம் பண்ணிணால் பிடிக்குமா?  நான் உட்பட என் தந்தை கூறினாலும் கூட கேட்பதில்லை.  எனது அனுபவத்தின் அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கிறேன்.  அதே போல மக்களுக்கும் எவ்வளவுதான் கூறினாலும் சரி சரி என்று கேட்டுக் கொள்வார்களே அன்றி தன்னைடைய வாழ்க்கைக்குத் தேவை என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மேலும் நம் மொழி குறித்து பேசும் போது விடுதலைப் புலிகள் அனைத்துத் தகவல்களையும் தமிழில் மொழிபெயர்த்து பிறகு தமிழில் தான் பயன்படுத்துவார்கள் என்று பெருமையாகப் பேசிக்கொள்கின்றனர்.  ஆனால் இங்கு நடைமுறைப்படுத்த முயற்சிபதில்லை அவ்வளவு ஏன் அதைப் பற்றி சிந்திப்பது கூட கிடையாது. ஆங்கிலம் என்பது மொழி அதை எளிதில் கற்றுக் கொள்ளலாம் என்று உபதேசிப்பதற்கும் ஆங்கிலத்தின் தேவையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கும் வேறுபாடு உள்ளது. நடைமுறையில் ஆங்கித்தின் தேவையை குறைக்காத வரை ஆர்வலர்களின் பேச்சு "குறைப்பிற்குச்" சமம்.

தற்போது உள்ள தொழில் நுட்பங்கள் இதற்கான சாத்தியக் கூறுகளை உருவாக்கியுள்ளது. முன்னால் ஈராக் அதிபர் சதாம் உசேன் கைது செய்யப்பட்ட போது ஐ.நா. படைத் தளபதி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பத்திரிக்கையாளர்கள் ஈராக்கிய மொழியில் கேட்டார்கள் ஆனால் இராணுவத் தளபதிகள் ஆங்கிலத்தில் விடையளித்தார்கள்.  எந்த மொழி பெயர்ப்பாளர்கள் இல்லை. அது பொறிமயமாக்கப்பட்டிருந்தது.  இனிவரும் காலங்களில் மொழிபெயர்ப்பு என்பது ஒன்றுமில்லாத்தாகிவிடும் எனவே அவரவர் அவரவர் மொழியிலேயே இருக்கலாம். 

எனது பணி கணினி செயலியாக்கம் உருவாக்கும் பணியாகும். இதில் உள்ள coding அனைத்தும் ஆங்கிலத்தில் தான் இருக்கும் ஆனால் coding-க்கான குறிப்புகள் (Commands) ஆங்கிலத்தில் எழுதுவதற்க்குப் பதில் தமிழில் எழுதுகிறேன். தொழிலதிபர்களாக உள்ள தாய் மொழி ஆர்வலர்கள் தங்கள் அலுவலகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் தமிழில் கையாளும் போது அங்கு பணியாற்றும் அனைவருக்கும் ஆவணங்கள் எளிதாகப் புரியும். எனவே உயர் அதிகாரிகளின் ஆங்கிலப் பூச்சண்டி வேலை செய்யாது.  சாதாரண மக்களுக்கும் ஆங்கிலம் தேவை என்ற மாயை தகர்ந்து போகும்.  இப்படி தமிழில் ஆவணப்படுத்தும் போது, கற்பதற்கு மட்டுமல்ல தொழிலுக்கும் தமிழ் அவசியமாகிறது. இதை உணர்ந்து தொழிலதிபர்களாக உள்ள தாய் மொழி ஆர்வலர்கள் நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும். நிறுவனத்தின் தொழிலாளராக அல்லாமல் ஒப்பத்த முறையில் தாய் மொழி ஆர்வலர்களை சிறு சிறு தொழிலதிபர்களாக உருவாக்க வேண்டும்.  இதைப் போன்ற ஆக்கப் பூர்வமான முறையில் மொழியைக் காப்பது பயன் தருமேயன்றி வேறு பிரச்சாரங்கள் புத்தக விற்பனையை மட்டும் ஏற்படுத்தும்..

வெள்ளி, 19 ஜூலை, 2013

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வஞ்சிக்கப்படும் பள்ளிக்கல்வி

இந்தக் கட்டுரையில் எனது அனுபவத்தை தெரிவித்து அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தொடர்ந்து விவரிக்கிறேன்.

இந்த கல்வியாண்டு (2013-14) எனது மகனை தாய் மொழியில் கல்வி கற்க கோவை தீத்திபாளையத்தில் உள்ள தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்சேர்த்தேன். ஆனால் தற்போது அரசின் அவசர ஆணையின் பேரில் அனைத்துப் பள்ளிகளிலும் வேறு மொழி மூலம் கல்வியை அறிமுப்படுத்தினார்கள்.  இதற்கு அப்பள்ளியில் குறைவான எண்ணிக்கையில் வகுப்பறைகள் இருந்ததால் கல்விக்குழு (!?) மற்றும் பெற்றோரிடம் 27.06.2013 அன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டபோது அக் குழுவின் தலைவர் (அப்பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியர்) மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒருதலை பட்சமாக தீர்மானம் எழுதிக் கொண்டார்கள்.  அதாவது வேறு மொழி மூலம் கல்வியை அறிமுகப்படுத்துவது பெற்றோர் விரும்பினால் தமிழில் தொடருவது என்று.

கூட்டத்தின் போது அக்குழுவின் தலைவர் "இது நல்ல வாய்ப்பு இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.  அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக "இது நல்ல வாய்ப்பு அல்ல இது விரிக்கப் படும் சதிவலை இதில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளவேண்டுமேயன்றி சிக்கிக் கொள்ளக்கூடாது " என்று கூறினேன்.  அதற்கு அவர் "எனது பிள்ளைகளை இதே பள்ளியில் தான் படிக்க வைத்தேன். அதன் பலனை இன்று அனுபவிக்கிறேன்" என்று தெரிவித்தார்.  அதற்கு நான் "பலன் என்றால் நல்ல பலனா அல்லது மோசமான பலனா?" என்றதும் அவர் மழுப்பலாக் "அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்" என்றார்.  அதற்கு நான் "அப்படியென்றால் அதைப் பற்றி இப்பொழுது ஏன் பேச வேண்டும்" என்று கேட்டேன். பதில் கூறாமல் தீர்மானம் என்ன எழுத வேண்டும் என்று பஞ்சாயத்து துணைத் தலைவருடன் சேர்ந்து கூறிவிட்டு சென்று விட்டனர்.  இதே கூட்டத்தின் போது ஆசிரியர்கள் அரசின் இந்த அவசரத் திட்டத்தில் உள்ள மிகமுக்கியமான தீமைகளைப் பற்றி கூறினர்.  இப்பள்ளியில் உள்ள பிள்ளைகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட (SC/ST) மக்களின் பிள்ளைகள். அவர்கள் தங்கள் பிள்ளைகள் எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என்று கூடத் தெரியாது. இந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று மட்டும் தான் கூறத் தெரியும் என்றும் மேலும் பிள்ளைகள் பள்ளி முடிந்து வீட்டுச் சென்றதும் பையை வீட்டில் எங்கேயோ வைத்து விட்டு அடுத்த நாள் பள்ளிக்கு வரும் போதுதான் தேடுவார்கள் இந்த நிலையில் அவர்களை வேறு மொழி மூலம் கல்வி கொடுக்கும் போது அது அந்த மாணவர்களும் பெரும் வெறுப்பைத் தரும் என்ற கருத்தைத் தெரிவித்தனர். ஆனால் இதையும் தீர்மானத்தில் தெரிவிக்காமல் மறைத்து விட்டனர் கல்விக் குழுவினர். அப்பொழுது அங்கு வந்த கல்வித்துறை அதிகாரி பெண் (AEO-Assistent Educational Officer) ஒருவர் வந்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் குறைந்துள்ளதால் ஆசிரியர்கள் வேறு இடங்களுக்கு மாற்றல் செய்ய வேண்டிவரும் எனவே அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க தனியார் கல்வி நிறுவனங்களைப் போல வேறு மொழி மூலம் ஆரம்ப கல்வியை அறிமுப்படுத்தியதாக் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது எனது எதிர்ப்பைத் தெரிவித்து கருத்தைக் கூறிய போது தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்றும் அரசு தான் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த ஆணை பிறப்பித்துள்ளதாக கூறினார்.  நான் எனது எதிர்ப்பை எழுத்து மூலம் அளிப்பதாகக் கூறி விடைபெற்றேன்.  

பிறகு எனது கருத்தை 01.07.2013 தேதியிட்ட கடிதம் மூலமாக தெரிவித்து தலைமை ஆசிரியையிடம் அளித்து கடிதம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை கேட்ட போது ஒப்புகை (Acknowledgment) கொடுக்கக் கூடாது என்று தெரிவித்து விட்டு கடிதத்தைப் பெற்றுக் கொண்டார். ஆனால் இன்று பள்ளிக்கு சென்று விசாரித்ததில் அனைத்து மாணவர்களையும்  வேறு மொழி மூலமாக கல்வி கற்கவைக்கப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.  எனது மகனைத் தவிர மற்ற 29 மாணவர்களும் வேறு மொழி மூலம் கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

மேற்கண்ட கூட்டத்தின் போது ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும் போது இந்த ஆண்டு முதல் வகுப்பில் சேரும் பிள்ளைகளில் பலர் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தாரின் பிள்ளகளின் இடை நிற்றல எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும். இதனால் அவர்களின் சமூக மேம்பாடு என்பது கானல்நீராகும். மேலும் அடுத்த பத்தாம் (2023-2024) கல்வி ஆண்டில் நடைபெறும் அரசுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் பெரும் சரிவை சந்திக்கும்.

மேற்கண்ட அரசின் அவசர திட்டத்திற்கு பொறுப்பற்ற கல்விக் குழுக்களும் கல்வித்துறை அதிகாரிகளும் காரணமாகின்றனர். எனது மகன் பயிலும் பள்ளியில் உள்ள கல்விக் குழுவானது ஒடுக்கப்பட்ட மக்களின் தற்கால நிலை மற்றும் அந்த மக்களின் எதிர்காலம் குறித்து எந்தவித அக்கரையும் காட்டாமல் ஒருதலை பட்சமாக தீர்மானத்தை எழுதியுள்ளனர். கல்வித்துறை அதிகாரிகளும் மாணவர்களின் திறன் மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்து ஆராயாமல் ஆசிரியர்களின் பணியை பாதுகாக்கும் ஒரே நோக்கத்துடன் இந்தத் திட்டத்தை அரசிடம் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.  இந்த அதிகாரிகள் அரசுப் பள்ளிகளில் எந்தப் பள்ளியில் முழுமையான மாணவர் சேர்க்கை நடந்துள்ளது என்று ஆராயவே இல்லை.  காரணம் கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகள் முன்புவரை முழுமையான சேர்க்கை நடந்துள்ளதாக அறிகிறேன்.  காரணம் அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது 100% ஆக இருந்தது.  அப்பள்ளியை முன் மாதிரியாக கொண்டு செயல்படுவதை விட்டு விட்டு தப்பிக்க செய்த சூழ்ச்சியாகத் தெரிகிறது.

அரசின் இந்த அவசரத் திட்டம் என்பது அதிகாரிகளின்/கல்விக்குழுக்களின் அலட்சியப் போக்கே காரணம் என்றும், இந்தத் திட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை முறியடிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

காகிதப்புலிகளும், போராட்ட ஆர்வலர்களும் தங்கள் பிள்ளைகளை வசதியான தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு, வெளியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கண்ணீரைக் காட்டுவார்கள்.  தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் துணிவு இல்லாதவர்கள் அரசை எதிர்க்க துணிவு வந்துவிடுமா என்ன?

---------------------------------------------------------------------------------------------------------------------------------
தலைமை ஆசிரியருக்கு அனுப்பிய கடிதம்.

28/06/2013
தீத்திபாளையம்.
அனுப்புனர்,
      மாணிக்கம்.க,
      2/182 ஆர்.கே.வி. கோல்டன் நகர்,
      தீத்திபாளையம்,
      கோயமுத்தூர்641010.

பெறுநர்,
      உயர்திருதலைமை ஆசிரியர் அவர்கள்,
      தொ.ஊ.ஒ.தொடக்கப்பள்ளி
      தீத்திபாளையம்,
      கோயமுத்தூர்641 010.

மதிப்பிற்குறிய அம்மையார்,
     
பொருள்;   தொ.ஊ.ஒ.தொடக்கப் பள்ளிதீத்திபாளையத்தில் ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தல் குறித்து

பார்வை ;   எனது மகன் திருவிடச் செல்வன் முதல் வகுப்பு தொ.ஊ.ஒ.தொடக்கப்பள்ளிதீத்திபாளையம்.

நேற்று(27.06.2013) தங்களின் அழைப்பின் பேரில் அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆங்கில வழி கல்விஅறிமுகப்படுத்தும் அரசின் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டத்தில் தங்கள் பள்ளிமாணவனின் தந்தை என்ற முறையில் கலந்து கொண்டேன்.

கூட்டத்தில்அரசு அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தும் திட்டம்குறித்து விளக்கி அதன் பொருட்டு ஆலோசனை நடத்தப்பட்டது. இது குறித்து எனதுகருத்துக்களை இங்கு கூற கடமைப்பட்டுள்ளேன்.

கல்விஎன்பது சிந்திக்க வைத்து அறிவை வளர்க்க வழிகாட்டுவது.  அது தாய்மொழி வழியாக இருப்பின் குழந்தைகள் புரிந்துகற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும்.  இதற்குஆதாரமாக பலர் நம்முடைய சமூகத்தில் சான்றாக உள்ளனர்.  முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்.  சந்திராயன் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரைஆகியோர் தாய் மொழிக் கல்வியையே சிறந்தது என்றும் கூறுகின்றனர்.

எந்தமொழியையும் எந்த வயதிலும் கற்றுக் கொள்ள முடியும் ஆனால் சிந்திப்பதைக் கற்றுக்கொடுக்க ஏற்ற வயது ஆரம்பக் கல்வி வயது. இலக்கியத்திற்காக இந்தியாவிலிருந்து நோபல் பரிசு பெற்ற இரவீந்தரநாத் தாகூர்அவர்கள் 40 வயதிற்கு மேல் தான் ஆங்கிலத்தை கற்றார். எனவே சிறு வயதில் வேறு மொழியின்மூலம் கல்வி என்பது குழந்தைகளுக்கு பெரும் சுமையாகும்.

தாய்மொழியில் சுமாராக படிக்கும் மாணவனால் வேறு மொழிவழிக் கல்வியில் படிக்கும் போதுஅந்த மாணவனால் முற்றிலுமாகக் கல்வியின் மீது வெறுப்பு ஏற்படுகிறது.  தாய்மொழி வழியில் பயிலும் போது இயல்புவாழ்க்கையோடு இருப்பதால் இயல்பாக கருத்துக்களை உள்வாங்கி சிந்தித்து மாற்றுக்கருத்துக்களை உருவாக்க வழி செய்கிறது.  அதுமாறாக வேறு மொழி வழியில் கற்கும் போது சிந்திக்க எதுவும் இல்லாமல் வெறும்மனப்பாடம் செய்யும் மனிதனாகவே உருவாகிறான். நிறுவனங்களுக்கு தேவையான மனிதஎந்திரமாக உருவாக்கப்படுகிறான். தாய் மொழிக் கல்வி தன்னம்பிக்கையை உருவாக்கும்.மாற்று மொழிக் கல்வி தன்னம்பிக்கையை உருக்குலைப்பதாக உள்ளது.

அரசின்இந்தத் திட்டம் குறித்து நட்பு வட்டத்தில் விவாதித்த போது அரசுப் பள்ளிகளில் கல்வியின்தரம் குறைவாக இருப்பதாலும், தனியார் பள்ளிகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களாலும்பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளின் சேர்த்து விடுகின்றனர் என்றகருத்து கூறப்பட்டது.

“அரசுப் பள்ளிகளுக்குப் போட்டியாக தனியார்பள்ளிகள்” என்ற நிலை மாறி சிறுசிறு பள்ளி நிறுவனங்களைப்பார்த்து, அவைகளுக்குப் போட்டியாக “வேறு மொழிக்கல்வி” என்ற தனது திட்டத்தைஅறிவிக்கும் போக்கு என்பது அரசு பள்ளிகளின் இயலாமையையே காட்டுகிறது.தனியார் பள்ளிகளில் பயிற்சி பெறாத தகுதியற்றவர்களையே பெரும்பாலும் ஆசிரியராகநியமிக்கப்படுகின்றார்கள். ஆனால்  அரசுப்பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் நன்கு பயிற்சி பெற்ற தகுதி உடைய ஆசிரியர்களேநியமிக்கப்பட்டு உள்ளனர்.  இப்படி உள்ளநிலையில் தகுதியற்றவர்களோடு, பயிற்சி பெற்று தகுதியோடு உள்ளவர்கள் தோற்றநிலையைக் காட்டுகிறது.

நமதுநாட்டில் மற்ற மாநிலங்களில் ஆரம்பக் கல்வி என்பது தாய்மொழிக் (அம்மாநிலத்தின்)கல்வியாக உள்ளது.  ஆனால் நமது தமிழ்நாட்டில் நிர்வாகச் சீர்கேட்டின் காரணத்தால் வேறு மொழிக் கல்விபரவலாக்கப்பட்டுள்ளது. இங்கு IAS IPS போன்ற போட்டித் தேர்விற்கு ஏற்ற மாணவர்கள் மிகஅரிதாகி வருகின்றனர்.  இங்கு உள்ள IAS IPS போன்ற பதவிகளுக்கு வேறு மாநிலத்தவர்களேமிகுந்துள்ளனர்.  மேலும் இதனால் IIT போன்ற அதிஉயர் கல்வி பயில தகுந்த மாணவர்களைஉருவாக்குவதில்லை. பள்ளிப் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவதோடுநின்றுவிடுகிறது. இயல்பு வாழ்க்கையோடு ஒன்றவிடாமல் தனித்து வாழவே பழக்குகிறது. ஆரம்பக்கல்வி என்பது அந்த மாணவனின் எதிர்காலத்தை வழிநடத்தக் கூடியது. எனவே சாதாரண ஏழைமாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக தன்னம்பிக்கையோடு வளர தாய்மொழிக்கல்வியைதொடர்ந்து  மேலும் மேம்படுத்த வேண்டும். எனவேவேறு மொழிமூலம் கல்வி என்ற திட்டத்தை அறிமுகப்படுவத்துவதற்குப் பதிலாக அரசுப் பள்ளிகளின்தரத்தை மேம்படுத்துவது எப்படி? மாணவர் சேர்க்கை குறைவதை தடுப்பது / உயத்துவதுஎப்படி என ஆலோசிப்பது சிறந்தது. “புலியைப்பார்த்து பூனை சூடு”போட்டக் கொள்ளட்டும்.  ஆனால்பூனையைப் பார்த்து புலி தன் காலை வெட்டிக் கொள்ள வேண்டாம் எனகேட்டுக் கொண்டு, “வேறு மொழி மூலம் கல்வி”என்ற திட்டத்திற்கு எனது கடும் எதிர்ப்பை மிகத் தாழ்மையுடன் பதிவு செய்து கொள்கிறேன்.
நன்றி

இப்படிக்கு

மாணிக்கம்.க