சனி, 7 ஆகஸ்ட், 2010

இட ஒதுக்கீடு

தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயர அவர்களுக்கு இட ஒருக்கீடு அளிக்கப்பட்டால் உடனே உயர்ந்து விடாது. அம்மக்களின் மனப்பான்மையை மாற்ற வேண்டும். டாக்டர் அம்பேத்கார் கல்வி பயின்ற காலத்தில் இட ஒதுக்கீடு என்பது நடைமுறையில் இல்லை. சொல்லப்போனால் கல்வி மறுக்கப்பட்டது. ஆனாலும் அவர் போராடி சட்டம் பயின்று, ஒரு மாபெரும் சட்ட மேதையானார். அவருக்கு கல்வியைக் கற்ற வேண்டும் என்ற ஆர்வமும் அதைப் பெற அவருக்கு துணிச்சலும் இருந்தது. எனவே மறுக்கப்பட்ட கல்வியை போராடிப் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அவர்களுக்கு சலுகைகள் அளிப்பது என்பது சரியான அணுமுறையல்ல. சலுகைகள் அவர்களின் திறமையைக் குறைப்பதுடன் மேலும் அவர்களின் வாழ்க்கைத் தரமும் சமூகத்தின் தரமும் தாழ்ந்துகொண்டே போகிறது. ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரம் என்பது அவரின் பிறப்பின் அடிப்படையிலோ, பொருளாதாரத்திலோ அமைந்து விடுவதில்லை. மாறாக அவரின் மனப்பான்மையைப் பொருத்தே வாழ்க்கை தரம் அமைகிறது. தனது மனப்பான்மையினால் அவர் தனக்குத் தேவையான பொருளாதாரத்தைத் திரட்டிக்கொள்ளவும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் முடியும்.

பொதுவாக இவர்களின் மனப்பான்மை தாழ்வு மனப்பான்மையாகவும் எதிர்மறை மனப்பான்மையாகவும் இருக்கிறது. மேலும் சோம்பலுக்குள் சிக்கிவிடுகின்றனர். தன்னிடம் உள்ளவற்றை வைத்துக் கொண்டு அவர்கள் சிறப்பாக வாழ்வதில்லை. மற்ற மக்களிடத்தில் இயல்பாக, சமமாகப் பழகுவதில்லை. சமூகத்திடமிருந்து விலகியே வாழ்கின்றனர். ஒரு காலகட்டம் வரை சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் தற்போது அப்படி இல்லை. வாய்ப்புகள் நன்றாக திறந்து விடப்பட்டுள்ள நிலையிலும் ஒதுங்கியே இருக்கின்றனர். எனது மனைவியும், அவரின் குடும்பத்தாரும் என் குடும்பத்தினருடன் கலந்து பழகுவதில்லை. விரோதிகளிடம் இருப்பதைப் போலவே எச்சரிக்கையாக இருப்பதாக கருதி ஒதுங்கியே இருக்கின்றனர். திருமணம் ஒன்றிற்கு சென்றிருந்த போது என்னுடன் பணியாற்றுகிறவரும் அவருடைய மனைவி குழந்தையையும் அழைத்து வந்திருந்தார். அவரின் மனைவியும் குழந்தையும், தலைக்கு எண்ணை தேய்த்து தலைவாராமல் வந்திருந்தார். அவர் யாருடனும் பேசாமல் தனிமையிலேயே இருந்தார். நாமாகப் போய் பேசினாலும் அவர் தவிர்க்கவே விரும்புவதாகத் தெரிந்தது. தலைக்கு எண்ணை தேய்த்து தலைவாரி வந்திருந்தாலே போதும். ஆடம்பர உடைகளோ நகைகளோ தேவையில்லை. மேலும் மற்றவர்களிடம் இயல்பாகப் பழகினாலே போதும். இதற்கு மனப்பான்மையில் மாற்றம் தேவை.

“வளமாகும் தமிழகம்” !?

நேற்றைய தினத்தந்தியில் (03.07.2010) தலையங்கத்தில் “வளமாகும் தமிழகம்” என்ற தலைப்பில் தீட்டியிருந்தார்கள். அதில் தமிழகத்தில் பிளாட்டினம் அதிக அளவில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தமிழக முதல்வரிடம் அறிக்கையை அளித்திருக்கிறார்கள். மேலும் பிளாட்டினம் அதிகம் உள்ள நிலப்பகுதிகளை பத்திரப் பதிவிற்கு தடைவிதித்து, அந்நிலங்களை நடுவணரசின் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பிளாட்டினத்தை பிரித்தெடுத்து அதன் மூலம் தமிழகம் வளமாகும் என்றும் கனவோடு தீட்டப்பட்டிருந்தது. ஆனால் உண்மை நிலை என்ன? தமிழகத்திற்கு தமிழர்களுக்கு என்ன பயன்? கிடைக்கும் செல்வத்தில் எவ்வளவு விழுக்காடு இப்பகுதி மக்களுக்கு பயன்படப்போகிறது?

ஒரு நாட்டின் அல்லது பகுதியின் வளர்ச்சி என்பது அந்த பகுதியில் கிடைக்கும் கனிம மற்றும் இயற்கை வளங்களைப் பொருத்து அமைகிறது. விவசாயத்தைச் சார்ந்த நாடு விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்து அதனை ஏற்றுமதி செய்து கொண்டு தனக்குத் தேவையான மற்ற தேவைகளை, செல்வங்களை பெற்றுக் கொள்ளும்.

ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை கைப்பற்றி செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். நமது மக்களின் உழைப்பை உறிஞ்சி செல்வச்செழிப்பில் கொழுத்தனர். பிறகு ஒருவழியாக விடுதலையடைந்ததும் மைய அரசு நமது தமிழகத்தை சுரண்ட ஆரம்பித்துவிட்டது. தமிழகத்தில் உள்ள இயற்கை கனிம வளங்களை (நிலக்கரி, பிளாட்டினம் இன்னும் பிற) நடுவணரசின் நிறுவனங்கள் சுரங்கங்களை அமைத்து அச்செல்வங்களை சுரண்டி மைய அரசு செல்வத்தை ஈட்டுகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் கூட மற்ற வெளி மாநில மக்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. ஆக இங்கு கிடைக்கும் கனிம வளங்களினால் நமக்கு சல்லி காசுக்கு பயனில்லை. ஆனால் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரைப் பெற்றுத்தர வேண்டிய நடுவணரசு தன்னுடைய பணியில்லை என்று ஒதுங்கிக் கொண்டு தமிழகத்தை ஒதுக்கிவிடுகிறது.

இயற்கை வளங்கள் அனைத்தும் மாநிலத்திற்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் சனநாயகத்திற்கு சரியான பொருளாகும். ஆனால் சனநாயகம் என்ற பெயரில் நமது செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாவோஸ்டு சிக்கலுக்குக் காரணமும் இதுவே. எனவே நடுவணரசு நிதியை கொடுத்து அதற்கு வட்டியைப் பெற்று அல்லது முதலீட்டுக்கு பங்கு மட்டும் பெற்று மாநில அரசின் பொறுப்பில் விட வேண்டும். இல்லையேல் மக்களையெல்லாம் பலி கொடுத்து நிறுவனங்களை காத்துக் கொண்டு இருக்க வேண்டிய நிலையே தொடர்ந்து கொண்டு இருக்கும்.

போலி மருத்துவம்

சில நாட்களாகவே போலி மருத்துவர்கள் பிடிபடுவதாக நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன. யார் போலி மருத்துவர்கள் என்றால் முறையாக ஆங்கில மருத்துவக் கல்லூரிகளில் பயின்று சான்றிதழ் பெறாதவர்கள். ஆனால் இந்த வகை மருத்துவர்களில் ஒரு சிலர் சான்றிதழ் பெறவில்லையே தவிர மிகச் சிறந்த மருத்துவப் பணியை செய்து வருகின்றனர். இவர்கள் சித்த மருத்துவத்தையோ, ஓமியோபதி மருத்துவத்தைப் பயின்றவர்களா இருப்பார்கள். அதே போல ஆங்கில மருத்துவக் கல்லூரியில் முறையாக மருத்துவம் பயின்று பட்டமும் சான்றிதழும் பெற்ற மருத்துவர்கள், மருத்துவப் பணியை சேவையாகச் செய்யாமல் வியாபாரமாக செய்து கொண்டு இருக்கின்றவர்களும், தவறான மருந்தை மட்டுமே கொடுத்து கடைசி வரை பயிற்சி மருத்துவர்களாகவே இருக்கின்றனர். பொறுப்பற்றவர்களாக, பொழுது போக்கிற்காக மருத்துவர்களை விட பொறுப்பான போலி மருத்துவர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவர்கள்.

எனக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்த போது அறுவை சிகிச்சைக்கும் முன் மயக்க மருந்து கொடுக்க முறைப்படி கல்லூரியில் பயின்ற, (பயிற்சி) மற்றும் சான்றிதழ் பெற்ற மருத்துவர் ஊசியை உட்செலுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தார். ஆனால் அங்கு செவிலியராக பணியாற்றிக் கொண்டிருந்த அனுபவம் உள்ள ஒரு பெண் ஊசியை வாங்கி நொடிப் பொழுதில் சரியாக உட்செலுத்தினார். இங்கு முறைப்படி மருத்துவம் கற்ற மருத்துவரை விட மருத்துவருடன் பணியாற்றும் போது கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த செவிலியர் சிறப்பாக செயல்பட்டார். மருத்துவம் என்பது குறிப்பிட்ட வயதிற்குள் கற்ற வேண்டும் என்ற நிலையை மாற்றி, தகுதிக்கு தேர்வு வைத்து அதன் மூலம் மருத்துவராக அங்கீகாரம் வழங்கலாம்.

கல்வி முறை

தற்போதைய கல்வி மெகலன் கல்விமுறையின் அடிப்படையில் உள்ளது. இம்முறையானது ஆங்கிலேயர்களுக்குத் தேவையான எழுத்தர் கணக்கர் போன்ற பணிகளுக்காக ஆட்களை தயார் செய்ய ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. இக்கல்விமுறையின் பரிணாம வளர்ச்சியின் விளைவு தற்போது சிந்திக்கத் தூண்டுவதை முடக்கி மனப்பாடத்திற்கு வழி வகுக்கிறது. மேலும் ஆசிரியர் மாணவர் இடைவெளியும் அதிகமாக உள்ளது, அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பதும் மிகக்குறைவு. இதில் மாற்றம் வேண்டும். ஒரு ஆசிரியர் பாடத்தை நடத்திய பின் அதனை மாணவர்கள் எவ்வளவு பேர் புரிந்து கொண்டார்கள் என்று கவனிப்பதில்லை. ஓரிருவர் புரிந்து கொண்டாலே போதும் என்ற மனப்பான்மை. எளிதில் புரிந்து கொள்ளும் மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும். இதனால் மாணவர்களுக்கிடையே உள்ள இடைவெளி குறையும். மேலும் மாணவர்கள் அந்த வயதொத்தவர்களுக்கு புரியும்படி சொல்லிக் கொடுக்க முடியும். இவ்வாறு ஒருவருக்கொருவர் சொல்லிக் கொடுக்கும் போது குழு மனப்பாண்மையும் வளரும்.

கலைஞர் கருணாநிதி

கலைஞர் கருணாநிதியின் மொழிப் பற்றிற்கு ஈடு இணை ஏதுமில்லை. தன் இனத்தை அழித்து மொழியைக் காக்கும் அவரது செயற்கறிய செயலை கண்டு பெருமை கொள்ள வேண்டுமேயன்றி அவர் இனத்தை அழிக்கப் புறப்பட்ட மூடர் அல்ல.

கலைஞர் தன்னுடைய மொழிவளத்தினால் பணம் பொருள் ஈட்டியதைக் குறையாக கூறுகின்றனர். இது முற்றிலும் தவறு. தமிழ் மொழியினால் ஒரு பயனும் இல்லை என்று கூற்று பொய்யாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி ஒருவருக்கு முதல்வர் பதவி வரை வழங்கியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் பிழை என்ன என்றால் அவர் பொருளை நேரிய வழியில் ஈட்டவில்லை ஆட்சியைக் கைப்பற்றி மிகப் பெரிய அளவிலான ஊழலை உற்பத்தி செய்து கொண்டு இருக்கின்றார். அவர் இலக்கியவாதியாக மட்டும் இருந்திருந்தால் நம் தமிழ்த்தாயின் மணி மகுடத்தில் ஒரு மரகதமாக வீற்றிருப்பார். ஆனால் அவருக்கு பீடித்திருந்த பண நோய் ஆட்சி பிடிப்பு ஊழல் உற்பத்தி கொள்ளை என இறங்கி விட்டதால் அவர் தமிழ் தாயை பீடித்திருக்கும் ஒரு தொழு நோயாக உள்ளார்.

கலைஞர் கருணாநிதி, இத்தாலியப் பெண்ணுக்கு மஞ்சள் அரைக்கும் பணிக்கு தன்னையும் தன் குடும்பத்தையும் அற்பணித்து விட்டார். எனவே தமிழகத்தைப் பற்றிய சிந்திக்க அவரால் இயலவில்லை.

மேலும் சட்டமன்றத்தில் கூறுகிறார், எம்.ஜி.ஆர் “ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே” என்று தன்னை நினைத்துப் பாடியதாக புகழ்ந்து கொள்கிறார். ஆம் கருணாநிதியை போன்றவர்களின் போக்கைக் கணித்து அன்று பாடிப்போயுள்ளார்கள். ஆனால் பாடல் மட்டும் வேறு அது “காஞ்சியிலே நான் படித்தேன் நேற்று அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று” என்ற பாடல்.

சனநாயகம்

உலகின் மிகப்பெரிய மக்களாட்சியை கொண்டுள்ள நாடு நம் இந்திய நாடு என்று கூறிக் கொள்கிறோம். மக்களாட்சி என்றால் பெரும்பான்மையான மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டு ஆட்சியை நடத்துவது. ஆனால் நிலைமை அப்படியா உள்ளது என்றால் பதில் இல்லை என்றே கூறவேண்டும். தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மொத்த மக்கள் தொகையில் எவ்வளவு விழுக்காடு ஆதரவு உள்ளது? வெறும் 20 விழுக்காட்டிற்குள் தான் இருக்கும். இந்த 20 விழுக்காடு 80 விழுக்காடு மக்களை ஆள்வதால் மாவோஸ்டு பிரச்சனை வெகு விரைவில் தலை தூக்கியுள்ளது. இந்த 20 விழுக்காடும் ஊழல் மற்றும் ஏமாற்று வழிகளில் தான். நேர்மையான வழியில் போட்டியிட்டிருந்தால்?

தற்போதைய அரசியல் அமைப்புச்சட்டப்படி நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ, உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் ஒருவர் வாக்களித்தால் அது சட்டமாகிவிடும்.

உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? தொகுதியில் யார் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறார்களோ அவர் உறுப்பினராகிவிடுகிறார். அவர் ஒரே ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்றாலும் அவர் உறுப்பினராகிவிடுவார். ஒரு வாக்கு குறைவாக பெற்றவர் உறுப்பினராக இயலாது.

எடுத்துக்காட்டாக ஒரு தொகுதியில் 
மொத்த வாக்காளார்களின் எண்ணிக்கை     1000
போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 6.

வேட்பாளர்
         ஆதரவு            எதிர்ப்பு
முதல் வேட்பாளர் 251 25.1%   749 74.9%
இரண்டாம் வேட்பாளர் 249 24.9%   751 75.1%
மூன்றாம் வேட்பாளர் 175 17.5%   825 82.5%
நான்காம் வேட்பாளர் 150 15.0%   850 85.0%
ஐந்தாம் வேட்பாளர் 80 8.0%   920 92.0%
ஆறாம் வேட்பாளர் 70 7.0%   930 93.0%

என வைத்துக் கொள்வோம் தற்போதைய நிலைப்படி முதலாமவர் வெற்றி பெறுகிறார். அதாவது மொத்த மக்கள் தொகையில் வெறும் 25 விழுக்காடு மட்டுமே ஆதரவு மற்ற 75 விழுக்காடு எதிர்ப்பு.

 75 விழுக்காடு மக்கள் ஆதரிக்காத ஒருவர் சட்ட மன்றத்திற்கு செல்கிறார். இதில் நிலையில் மாற்றம் வேண்டும். அதாவது குறைந்த பட்சமக 50 விழுக்காடு மக்களின் ஆதரவு சட்ட மன்றத்தில் ஒலிக்க வேண்டும். இதற்கு முதல் இருவரும் சட்ட மன்றம் செல்ல வேண்டும். இந்த உறுப்பினர்களுக்கு அவர்கள் பெற்ற வாக்குகளின் விகிதப்படி புள்ளிகள் அளிக்கப்பட வேண்டும். சட்டத்தை இயற்றும் போது கோரப்படும் வாக்குகள் ஒரு உறுப்பினருக்கு ஒரு வாக்கு என்றில்லாமல் அவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை அமையும். அதனடிப்படையில் சட்டம் ஏற்றுக் கொள்ளப்படும்.

தமிழ்

தற்காலத்தில் தமிழின் நிலைப் பற்றி பேசும் போது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. தமிழில் பேசுவதைவிட ஆங்கிலத்தில் பேசுவது பெருமைக்கு உரியது என்ற கருத்து மேலோங்கிக் கொண்டு வருகிறது.
பழமையும் தொன்மையும் எக்காலத்திற்கும் ஏற்ற மொழி என்ற பெருமை கொண்ட மொழி நம் தமிழ்மொழி. தற்போதைய சூழலில் நம் மொழிக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டுள்ளது என்பது காலத்தின் கட்டாயம். இத்தகைய தடைகள், சிதைப்புகள் என எல்லா சவால்களையும் தாண்டி வரும் மொழி மேற்கண்ட சிறப்புகளை கொண்டிருக்கும். எனவே தற்போது ஏற்பட்டுள்ள சிதைப்புகள் அழிப்புகள், இடர்கள் இன்னல்கள் மற்றும் நோய்களைப்பற்றிப் பெரும் கவலை கொண்டிருக்காமல் நாம் நமது மொழியை நம்பிக்கையோடு வளர்ப்போம். மோசமான சூழ்நிலை என புறங்கூறாமல் இச்சோதனைக் காலத்தை உறுதியோடு வெற்றி கொள்வோம். வென்றபின் மகிழ்ச்சி கொள்வோம்.

தமிழர்

தற்போது ஈழத்திலே தமிழினம் வீழ்த்தப்பட்டுள்ளது. காரணம் தாய்த் தமிழ் நாட்டிலே ஈழ விடுதலைப் போருக்கு ஒட்டு மொத்த ஆதரவு இல்லை. உலகின் பல்வேறு நாடுகளில் நம் தமிழினம் துண்டுதுண்டாக சிதறிக் கிடக்கிறது. தமிழகத்திலே கருத்து முரண்பாடு காரணமாக, மிக முக்கிய சிக்கல்களுக்கு முன்னுரிமை தராமல் அற்ப சிக்கல்களுக்கு அதீத முன்னுரிமை கொடுத்து இங்கு சிதறி சிதைந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஈழத்தில் தமிழின அழிப்பிற்கு இந்தியா முன்னணியில் இருந்திருக்கிறது.

இங்கு முத்துக்குமாரனின் உயிர்த்தியாகம் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது. தனது மரண வாக்குமூலத்தில் தனது மரணத்தின் மூலம் அரசியலைத் தட்டியெழுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளான். ஆனால் கருணாநிதியோ அரசியலாக்க வேண்டாம் என்றும், அவரது மரணத்தை, தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அறிக்கையும் விடுத்திருந்தார். இளம் தலைமுறையினரிடத்தில் ஒரு சிலரே இத்தியாகத்தினால் உந்தப்பட்டு சரியான தளங்களில் நின்று போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர். பலரே ஆதங்கப்பட்டு, கோபப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். வெறும் கோபம் நம்மைத் தான் அழிக்கும். நமது செயல்பாடுகளில் அது வெளிப்படுத்த வேண்டும். தனது இனத்தை காக்கும் பொறுப்பு அவ்வின மக்களிடையே தான் உள்ளது. “நான் தமிழன்” எனக் கூறி பெருமை கொள்வதினால் என்ன பயன்? சிங்களவன் என்பதனால் சிங்களவன் சிறுமை கொள்கிறானா? பிறகு என் இந்த வீண் பெருமை. பாட்டன் முப்பாட்டனின் பெருமையை வைத்துக் கொண்டு இருப்பதை விட, நம்மால் நம் இனம் பெருமை கொள்ள வேண்டும். அதற்கான செயல்பாடுகள் தேவை.

“வலியது வெல்லும்” என்பது உலகம் ஏற்றுக் கொண்ட உண்மை. வலியது என்பது எந்தச் சிக்கலும் இல்லாமல் நீண்ட நாள் இருப்பது அல்ல. பல சோதனைகளை, பேரிடர்களை தாங்கி, தாண்டி நிற்பது தான் வலியது. அந்த வகையில் இது நமக்கு மிகப்பெரிய சோதனைக் காலமாகும். எனவே இச்சோதனைகளை வென்று தடைகளையும் தாண்டி செல்ல வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. ஒரு தாய் தனது குழந்தையைப் பெற்றெடுக்கும் போது உள்ள வாழ்வியல் போரட்டம் போன்ற நிலை தற்போது நமக்கு ஏற்பட்டுள்ளது. இதில் தாய் சேய் இருவரையும் காக்க வேண்டிய பொறுப்பு நம்மைச் சார்ந்தது.

தற்போது தமிழகத்திலே எங்கும் ஊழல் எதிலும் ஊழல். தனிமனித ஒழுக்கம் என்பது கேலிக்குறியதாக உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும். அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை மக்கள் தொகையைப் போல பெருகிக் கொண்டே இருக்கிறது. அரசியல் கட்சிகளின் நோக்கம் அரசாட்சியைக் கைப்பற்றுவது, ஆட்சியில் அமர்வது அல்லது ஆடசியை பங்கிட்டுக் கொள்வது. இதற்காக எல்லா வித சித்து வேலைகளையும் செய்யத் துணிந்து விட்டார்கள். பொது மக்களோ பயந்து ஒதுங்கி விடுகின்றனர். இதனால் காலிகளும், கலவாணிகளும் ஒட்டு மொத்தமாக ஆட்சிப் பீடத்தில் உட்கார்ந்து கொண்டனர். மக்களுக்கு தங்களின் நிகழ்கால, எதிர்கால, குறுகிய கால மற்றும் நீண்ட காலத் தேவைகள் பற்றிய சிந்தனையோ அறிவோ இல்லாமல் மூளை மழுங்கடிக்கப்பட்டுள்ளனர். இதற்காக தொலைக்காட்சியை பயன்படுத்திக் கொள்கின்றனர். காலம் முழுவதும் பொழுது போக்கு என்ற வாழ்க்கை முறைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு தங்களின் திறமையைப் பற்றிய தெளிவு இல்லை. தன்னுடைய திறமையைப் பற்றிய தெளிவு இருந்தால் அதைப் பெருக்க வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். திறமை என்றால் தொலைக்காட்சியில் ஆட வேண்டும் அல்லது பாட வேண்டும். இதுவே வாழ்வின் இலக்காகிப் போய்விட்டது.

நமது இனத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு ஏற்ற சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். இதனைக் குறிக்கோளாகக் கொண்டவர்கள் ஒன்றிணைந்து புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அன்றாட நிகழ்வுகளுக்கும், தேவைகளுக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். உடற்பயிற்சி, மனப்பயிற்சி மற்றும் சிந்தனையைத் தூண்ட கலந்தாய்வுகளும் நடத்தப்பட வேண்டும். சிறுசிறு உடற்பயிற்சி உடலுக்கும், வயிறு குலுங்கச் சிரிப்பது உடலுக்கும் மனதிற்கும் பயிற்சியாக இருக்கும். வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். அதற்கு தேனீரங்காடி நகலகம், உணவகம் போன்றவற்றை ஏற்படுத்தி தொழிலுக்கும் அதன் மூலம் மொழி வளர்ச்சிக்கும் வழிவகை செய்ய வேண்டும். தேனீர் விலை ரூ 4.00 “டீ” விலை ரூ 6.00 என தேனீரகங்களிலும், சோறு அல்லது சாப்பாட்டின் விலை ரூ 25.00 மீல்ஸ் அல்லது ரைசின் விலை 35 என உணவகங்களிலும், ஒரு நகல் விலை ரூ 0.50 ஜராக்ஸ் விலை ரூ 0.75 என நகலகங்களிலும் நிர்ணயம் செய்ய வேண்டும். இம்முறையை கொண்டு வந்தால் நிச்சயம் பலனளிக்கும்.

மக்கள் தனித்தனி மனிதர்களாகச் சிதறிப் போயுள்ளனர். சமூக நிகழ்வுகளைப்பற்றியோ உலகின் போக்குபற்றியோ சிறிதளவும் அக்கரையோ சிந்தனையோ இன்றி தான் தனது என்ற மன நிலையில் தனித்து இயங்கிக் கொண்டு இருக்கின்றனர். மக்களின் இந்த மனஓட்டமானது அரசியல் மற்றும் பணமுதலைகளுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாகிவிட்டது. மக்களை பக்குவப்படுத்தப்பட்ட நன்கு பழக்கபட்டுத்தப்பட்ட அடிமைகளாக, நாகரீக அடிமைகளாக மாற்றிவிட்டார்கள். தற்போதைய கல்விமுறையும் தேசிய உணர்ச்சியும் இதற்குப் மிகச் சிறப்பாக பயன்படுகிறது.

நாம் தமிழர்

தற்போது தமிழகத்த்தில் உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு? இந்நிலையில் நாம் தமிழர் என்ற அரசியல்கட்சியை சீமான் தொடங்கியுள்ளார். இக்கட்சியில் உள்ளவர்கள் யார்? இவர்களின் குணங்கள் என்ன? இளயதலை முறையினர் மிகவும் உணர்ச்சியுடையவர்களாக இருக்கின்றவர்கள். பொறுமையாக சிந்தித்து தொலை நோக்கு பார்வையுடயவர்களாக, பரந்த மனப்பாண்மையுடையவர்களாக மாற்ற வேண்டும். இல்லையேல் இவ்வியக்கத்தை எளிதில் தவிடு பொடியாக்கிவிடலாம்.

தமிழ் இனத்திற்காக, தமிழகத்தில் குரல் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சி நாம் தமிழர் இயக்கம். இவ்வியக்கத்தில் அடிப்படை உறுப்பினர், தீவிர உறுப்பினர், போராளி என்ற நிலைகள் இருக்க வேண்டும். அடிப்படை உறுப்பினர் சாதாரனணமாக ஆதரவு தரும் ஆளாக மட்டும் இருப்பார். தீவிர உறுப்பினர் பயிற்சி பெற்றிருப்பார். போராளி களத்தில் இருந்து பணிகளை மேற்கொள்பவர்.

இங்கு களம் என்பது மேடைகள், கூட்டங்கள் ஆட்களைத் திரட்டுதல் கொடி பிடித்து, கட்டி, ஏற்றி முழக்கங்களை மேற்கொள்வது அல்ல. மனிதனின் அன்றாட, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது. ஏழ்மையில் உள்ள போராளிக்கு சாதாரண தேனீர் அங்காடியை இயக்கத்தின் மூலம் வைத்துக் கொடுத்து அதில் அவருக்குத் தேவையான வாழ்வாதாரத்திற்கு வழியையும் ஏற்படுத்தி, அவ்வங்காடி மூலம் மொழியையும் வழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும். இவ்வங்காடியில் தேனீர் விலை ரூ 4.00 டீ விலை ரூ 6.00 என நிர்ணயம் செய்ய வேண்டும். கேலிப் பேச்சுக்களைக் கண்டு கலங்காமல், இம்முறையில் தேனீரகம், நகலகம் மற்றும் உணவகம் என எங்கெல்லாம் தமிழை நடைமுறைப்படுத்த முடியுமோ அங்கெல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழால் பயனில்லை என்ற நிலையை மாற்ற வேண்டும். ஆட்சியைப் பிடிப்பது என்ற நோக்கில் செயல்படுவதை விட அடித்தளத்தை பிடிக்க வேண்டும். நம் நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் பெறும்பாண்மை வேண்டும். மக்கள் எதன் பின்னால் வருவார்கள் என நோக்கினால் புரியும்.

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வருமானத்திற்கு என்ன வழி என்று கணக்குப் போட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். மிகச்சிலரே மொழி, கலை என வருமானத்தைப் பற்றி கவலைப்படாமல் தொண்டு செய்கின்றனர். உணர்ச்சிகரமான பேச்சு மொழியையோ இனத்தையோ வாழவைத்துவிடாது. மொழியின் மீது பற்று இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் அவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லை. தன்னுடைய விருப்பத்திலிருந்து விலகி அதற்கு முரணாக செயல்பட வேண்டியுள்ளது.
பொருளாதாரம் என்பது நமது அன்றாடத் தேவைகளுக்கும், சமூகத்தில் தன்னுடைய தகுதியை உயர்த்திக்கொள்ளவும் உள்ள மிக முக்கியமான காரணியாகும். இதற்காக அனைத்து தர மக்களும் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் செலவிடுகின்றனர். எனவே மொழியை வளர்க்க பொருளாதாரம் என்பது ஒரு வலுவான காரணியாக இருப்பதால் அதன் மூலம் மொழியை வளர்க்கலாம்.