வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

தமிழகத்தின் தற்போதைய அவசரத் தேவை

தமிழகத்தின் தற்போதைய அவசரத் தேவை அரசியலில் தமிழ் உணர்வு ஒருங்கிணைப்பு. ஈழப்போர் முடிவுற்றதும் இங்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் உருவாகியுள்ளது. இவற்றின் நோக்கம் தமிழ் “தேசியம்”-உம் ஆகும். வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல்-௨௰௧௧ (2011) ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு காரணமாக காங்கிரசு கட்சியும் அப்படுகொலையை கண்டுகொள்ளாத திராவிடக் கட்சியான தி.மு.க ஒரே கூட்டணியில் இருந்தாலும் அக்கூட்டணியில் விடுதலைச் சிறுத்தையும் இடம் பெறுவதும்.

மேற்படிப் படுகொலைகள் நடந்து கொண்டிருந்த போது “போரின் போது மக்கள் கொல்லப்படுவது இயல்பான ஒன்று” என அறிக்கை விட்ட அ.இ.அ.தி.மு.க உடன் ம.தி.மு.க என பிளவுபட்டு நிற்கின்றன தமிழ் இன உணர்வு கட்சிகள்.

ஈழத்தில் நடைபெற்ற இனப்படு கொலைக்கு ராசபட்சே, சோனியா, மன்மோகன்சிங், பிரணாப் முகர்சி, ப.சிதம்பரம், கருணாநிதி, E.V.K.S. இளங்கோவன் மற்றும் தங்கபாலு மட்டுல்ல காரணம். இங்கு உள்ள தமிழ் இன உணர்வு கட்சிகளான ம.தி.மு.க., வி.சி, பா.ம.க. போன்ற கட்சிகளுக்கும் பங்கு உள்ளது என்பது வரலாற்று உண்மை. இந்த தமிழ் உணர்வுக் கட்சிகள் தங்களுக்கிடையே ஒரு ஒருங்கிணைப்பிணை ஏற்படுத்திக் கொள்ளாமல் தங்களுடைய தனிப்பட்ட ஆதாயத்திற்காக குறுகிய மனப்பான்மையினால் பிரிந்து இருந்தமையே ஈழ இனப்படுகொலைகாரர்களுக்கு வாய்ப்பாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் இப்படுகொலையை தனக்கு சாதகமக்கிக் கொள்ளவே போட்டி போடுகின்றன என்பது அசிங்கமான, அவலமான உண்மையாக உள்ளது. தியாகி முத்துக் குமாரின் வேண்டுகோளான முத்துக் குமாரின் உயிராயுத்தை மழுங்கடித்து, அவனது தியாகத்தை உதாசீனப்படுத்தி அவனது மரணத்தை தனக்கு சாதகமாக்க துடிக்கும் கட்சிகளே இங்கு உள்ளன. விடுதலைச் சிறுத்தைகள், ஈழத்தைப் பற்றி இவர்கள் மட்டுமே பேச வேண்டும் என்று வன்முறைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய, படுபயங்கர, கொடூர, அப்பட்டமான இனப்படுகொலை, தன் இனத்திற்கு நடந்த பிறகும் இவர்கள் பிரிந்தே இருக்கின்றார்கள். இனப் படுகொலைகாரர்களோடுதான் கூட்டுச் சேர்கின்றனர். தமிழ் உணர்வு கட்சிகள், தனியே கூட்டணி அமைத்து நிற்க துணிவுமில்லை தன்னம்பிக்கையும் இல்லை. காரணம் சாதி என்ற குறுகிய கண்ணோட்டம். சாதியத்தை ஏற்படுத்திய ஆரியத்தை எதிர்க்ககூடிய இவர்கள், அந்த ஆரியர்கள் ஏற்படுத்திய சாதியத்தை எதிர்க்க, துறக்க துணிவில்லை.

தமிழ் உணர்வு கட்சிகளின் பிரிவு தமிழக மக்களை மிகப் பெரிய குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கருணாநிதியின் சூழ்ச்சியே மக்களை குழப்பி அதில் ஆதாயம் தேடுவது (உ.ம் ஏழையின் பங்களா பாரீர் என காமராசர் மீதே அவதூரான பரப்புரை), எதிராளியின் கட்சியில் பிளவை(வுகளை) ஏற்படுத்தி அதன் மூலம் தன் பலத்தை தக்க வைத்துக் கொள்வது. இதைத் தெரிந்தும் இவர்கள் பிளவுபட்டு நிற்பது கருணாநிதியின் பலத்தையும், தமிழ் உணர்வு கட்சிகளின் பலவீனத்தை அல்லது தன் ஆதாயத்திற்காக மொழியுணர்வைப் பயன்படுத்திக் கொள்வதைக் காட்டுகிறது.

அறவழிப் போராட்டத்தின் அடையாளமான திலிபன், பட்டினிப் போரட்டம் நடத்தி தன் உயிரை விடுதலைக்காக விதைத்ததும் ஈழத்தில் பெருங்கலவரமோ வன்நிகழ்வுகளோ நடைபெறவில்லை. மாறாக இந்தியாவின் உண்மை நிலையை உலகிற்கு உணர்த்தி, எதிர்காலத்திற்கான நகர்வுகளை நகர்த்த ஆரம்பித்தனர். போராளிகளை ஒருங்கிணைப்பதும் ராசதந்திர நகர்வுகளை நகர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள். ஆனால் இங்கு, தமிழுணர்வு கட்சிகள் ஒவ்வொன்றும் பிரபாகரனைப் பற்றியும் நடத்தி முடிந்த இனப்படு கொலையைப்பற்றி மேடைதோறும் தங்களுடைய ஆதாயங்களுக்காக பேசி வருகின்றன. இந்தப் போக்கானது, பிரபாகரனும் நடத்தி முடிக்கப்பட்டு இனப்படு கொலையும் இவர்களுக்கு மதுவைப் போல மயக்கத்தைத் தான் தருகின்றன.

அரசியல் கட்சிகள் மட்டும் தான் இந்த நிலையா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு தெளிவான, உறுதியான தொலை நோக்கு பார்வையுடன் கூடிய செயல் திட்டம் ஒன்று இருப்பதாக தோன்றவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக