சனி, 7 ஆகஸ்ட், 2010

“வளமாகும் தமிழகம்” !?

நேற்றைய தினத்தந்தியில் (03.07.2010) தலையங்கத்தில் “வளமாகும் தமிழகம்” என்ற தலைப்பில் தீட்டியிருந்தார்கள். அதில் தமிழகத்தில் பிளாட்டினம் அதிக அளவில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தமிழக முதல்வரிடம் அறிக்கையை அளித்திருக்கிறார்கள். மேலும் பிளாட்டினம் அதிகம் உள்ள நிலப்பகுதிகளை பத்திரப் பதிவிற்கு தடைவிதித்து, அந்நிலங்களை நடுவணரசின் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பிளாட்டினத்தை பிரித்தெடுத்து அதன் மூலம் தமிழகம் வளமாகும் என்றும் கனவோடு தீட்டப்பட்டிருந்தது. ஆனால் உண்மை நிலை என்ன? தமிழகத்திற்கு தமிழர்களுக்கு என்ன பயன்? கிடைக்கும் செல்வத்தில் எவ்வளவு விழுக்காடு இப்பகுதி மக்களுக்கு பயன்படப்போகிறது?

ஒரு நாட்டின் அல்லது பகுதியின் வளர்ச்சி என்பது அந்த பகுதியில் கிடைக்கும் கனிம மற்றும் இயற்கை வளங்களைப் பொருத்து அமைகிறது. விவசாயத்தைச் சார்ந்த நாடு விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்து அதனை ஏற்றுமதி செய்து கொண்டு தனக்குத் தேவையான மற்ற தேவைகளை, செல்வங்களை பெற்றுக் கொள்ளும்.

ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை கைப்பற்றி செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். நமது மக்களின் உழைப்பை உறிஞ்சி செல்வச்செழிப்பில் கொழுத்தனர். பிறகு ஒருவழியாக விடுதலையடைந்ததும் மைய அரசு நமது தமிழகத்தை சுரண்ட ஆரம்பித்துவிட்டது. தமிழகத்தில் உள்ள இயற்கை கனிம வளங்களை (நிலக்கரி, பிளாட்டினம் இன்னும் பிற) நடுவணரசின் நிறுவனங்கள் சுரங்கங்களை அமைத்து அச்செல்வங்களை சுரண்டி மைய அரசு செல்வத்தை ஈட்டுகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் கூட மற்ற வெளி மாநில மக்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. ஆக இங்கு கிடைக்கும் கனிம வளங்களினால் நமக்கு சல்லி காசுக்கு பயனில்லை. ஆனால் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரைப் பெற்றுத்தர வேண்டிய நடுவணரசு தன்னுடைய பணியில்லை என்று ஒதுங்கிக் கொண்டு தமிழகத்தை ஒதுக்கிவிடுகிறது.

இயற்கை வளங்கள் அனைத்தும் மாநிலத்திற்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் சனநாயகத்திற்கு சரியான பொருளாகும். ஆனால் சனநாயகம் என்ற பெயரில் நமது செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாவோஸ்டு சிக்கலுக்குக் காரணமும் இதுவே. எனவே நடுவணரசு நிதியை கொடுத்து அதற்கு வட்டியைப் பெற்று அல்லது முதலீட்டுக்கு பங்கு மட்டும் பெற்று மாநில அரசின் பொறுப்பில் விட வேண்டும். இல்லையேல் மக்களையெல்லாம் பலி கொடுத்து நிறுவனங்களை காத்துக் கொண்டு இருக்க வேண்டிய நிலையே தொடர்ந்து கொண்டு இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக