சனி, 7 ஆகஸ்ட், 2010

தமிழர்

தற்போது ஈழத்திலே தமிழினம் வீழ்த்தப்பட்டுள்ளது. காரணம் தாய்த் தமிழ் நாட்டிலே ஈழ விடுதலைப் போருக்கு ஒட்டு மொத்த ஆதரவு இல்லை. உலகின் பல்வேறு நாடுகளில் நம் தமிழினம் துண்டுதுண்டாக சிதறிக் கிடக்கிறது. தமிழகத்திலே கருத்து முரண்பாடு காரணமாக, மிக முக்கிய சிக்கல்களுக்கு முன்னுரிமை தராமல் அற்ப சிக்கல்களுக்கு அதீத முன்னுரிமை கொடுத்து இங்கு சிதறி சிதைந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஈழத்தில் தமிழின அழிப்பிற்கு இந்தியா முன்னணியில் இருந்திருக்கிறது.

இங்கு முத்துக்குமாரனின் உயிர்த்தியாகம் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது. தனது மரண வாக்குமூலத்தில் தனது மரணத்தின் மூலம் அரசியலைத் தட்டியெழுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளான். ஆனால் கருணாநிதியோ அரசியலாக்க வேண்டாம் என்றும், அவரது மரணத்தை, தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அறிக்கையும் விடுத்திருந்தார். இளம் தலைமுறையினரிடத்தில் ஒரு சிலரே இத்தியாகத்தினால் உந்தப்பட்டு சரியான தளங்களில் நின்று போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர். பலரே ஆதங்கப்பட்டு, கோபப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். வெறும் கோபம் நம்மைத் தான் அழிக்கும். நமது செயல்பாடுகளில் அது வெளிப்படுத்த வேண்டும். தனது இனத்தை காக்கும் பொறுப்பு அவ்வின மக்களிடையே தான் உள்ளது. “நான் தமிழன்” எனக் கூறி பெருமை கொள்வதினால் என்ன பயன்? சிங்களவன் என்பதனால் சிங்களவன் சிறுமை கொள்கிறானா? பிறகு என் இந்த வீண் பெருமை. பாட்டன் முப்பாட்டனின் பெருமையை வைத்துக் கொண்டு இருப்பதை விட, நம்மால் நம் இனம் பெருமை கொள்ள வேண்டும். அதற்கான செயல்பாடுகள் தேவை.

“வலியது வெல்லும்” என்பது உலகம் ஏற்றுக் கொண்ட உண்மை. வலியது என்பது எந்தச் சிக்கலும் இல்லாமல் நீண்ட நாள் இருப்பது அல்ல. பல சோதனைகளை, பேரிடர்களை தாங்கி, தாண்டி நிற்பது தான் வலியது. அந்த வகையில் இது நமக்கு மிகப்பெரிய சோதனைக் காலமாகும். எனவே இச்சோதனைகளை வென்று தடைகளையும் தாண்டி செல்ல வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. ஒரு தாய் தனது குழந்தையைப் பெற்றெடுக்கும் போது உள்ள வாழ்வியல் போரட்டம் போன்ற நிலை தற்போது நமக்கு ஏற்பட்டுள்ளது. இதில் தாய் சேய் இருவரையும் காக்க வேண்டிய பொறுப்பு நம்மைச் சார்ந்தது.

தற்போது தமிழகத்திலே எங்கும் ஊழல் எதிலும் ஊழல். தனிமனித ஒழுக்கம் என்பது கேலிக்குறியதாக உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும். அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை மக்கள் தொகையைப் போல பெருகிக் கொண்டே இருக்கிறது. அரசியல் கட்சிகளின் நோக்கம் அரசாட்சியைக் கைப்பற்றுவது, ஆட்சியில் அமர்வது அல்லது ஆடசியை பங்கிட்டுக் கொள்வது. இதற்காக எல்லா வித சித்து வேலைகளையும் செய்யத் துணிந்து விட்டார்கள். பொது மக்களோ பயந்து ஒதுங்கி விடுகின்றனர். இதனால் காலிகளும், கலவாணிகளும் ஒட்டு மொத்தமாக ஆட்சிப் பீடத்தில் உட்கார்ந்து கொண்டனர். மக்களுக்கு தங்களின் நிகழ்கால, எதிர்கால, குறுகிய கால மற்றும் நீண்ட காலத் தேவைகள் பற்றிய சிந்தனையோ அறிவோ இல்லாமல் மூளை மழுங்கடிக்கப்பட்டுள்ளனர். இதற்காக தொலைக்காட்சியை பயன்படுத்திக் கொள்கின்றனர். காலம் முழுவதும் பொழுது போக்கு என்ற வாழ்க்கை முறைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு தங்களின் திறமையைப் பற்றிய தெளிவு இல்லை. தன்னுடைய திறமையைப் பற்றிய தெளிவு இருந்தால் அதைப் பெருக்க வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். திறமை என்றால் தொலைக்காட்சியில் ஆட வேண்டும் அல்லது பாட வேண்டும். இதுவே வாழ்வின் இலக்காகிப் போய்விட்டது.

நமது இனத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு ஏற்ற சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். இதனைக் குறிக்கோளாகக் கொண்டவர்கள் ஒன்றிணைந்து புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அன்றாட நிகழ்வுகளுக்கும், தேவைகளுக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். உடற்பயிற்சி, மனப்பயிற்சி மற்றும் சிந்தனையைத் தூண்ட கலந்தாய்வுகளும் நடத்தப்பட வேண்டும். சிறுசிறு உடற்பயிற்சி உடலுக்கும், வயிறு குலுங்கச் சிரிப்பது உடலுக்கும் மனதிற்கும் பயிற்சியாக இருக்கும். வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். அதற்கு தேனீரங்காடி நகலகம், உணவகம் போன்றவற்றை ஏற்படுத்தி தொழிலுக்கும் அதன் மூலம் மொழி வளர்ச்சிக்கும் வழிவகை செய்ய வேண்டும். தேனீர் விலை ரூ 4.00 “டீ” விலை ரூ 6.00 என தேனீரகங்களிலும், சோறு அல்லது சாப்பாட்டின் விலை ரூ 25.00 மீல்ஸ் அல்லது ரைசின் விலை 35 என உணவகங்களிலும், ஒரு நகல் விலை ரூ 0.50 ஜராக்ஸ் விலை ரூ 0.75 என நகலகங்களிலும் நிர்ணயம் செய்ய வேண்டும். இம்முறையை கொண்டு வந்தால் நிச்சயம் பலனளிக்கும்.

மக்கள் தனித்தனி மனிதர்களாகச் சிதறிப் போயுள்ளனர். சமூக நிகழ்வுகளைப்பற்றியோ உலகின் போக்குபற்றியோ சிறிதளவும் அக்கரையோ சிந்தனையோ இன்றி தான் தனது என்ற மன நிலையில் தனித்து இயங்கிக் கொண்டு இருக்கின்றனர். மக்களின் இந்த மனஓட்டமானது அரசியல் மற்றும் பணமுதலைகளுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாகிவிட்டது. மக்களை பக்குவப்படுத்தப்பட்ட நன்கு பழக்கபட்டுத்தப்பட்ட அடிமைகளாக, நாகரீக அடிமைகளாக மாற்றிவிட்டார்கள். தற்போதைய கல்விமுறையும் தேசிய உணர்ச்சியும் இதற்குப் மிகச் சிறப்பாக பயன்படுகிறது.