சனி, 7 ஆகஸ்ட், 2010

நாம் தமிழர்

தற்போது தமிழகத்த்தில் உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு? இந்நிலையில் நாம் தமிழர் என்ற அரசியல்கட்சியை சீமான் தொடங்கியுள்ளார். இக்கட்சியில் உள்ளவர்கள் யார்? இவர்களின் குணங்கள் என்ன? இளயதலை முறையினர் மிகவும் உணர்ச்சியுடையவர்களாக இருக்கின்றவர்கள். பொறுமையாக சிந்தித்து தொலை நோக்கு பார்வையுடயவர்களாக, பரந்த மனப்பாண்மையுடையவர்களாக மாற்ற வேண்டும். இல்லையேல் இவ்வியக்கத்தை எளிதில் தவிடு பொடியாக்கிவிடலாம்.

தமிழ் இனத்திற்காக, தமிழகத்தில் குரல் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சி நாம் தமிழர் இயக்கம். இவ்வியக்கத்தில் அடிப்படை உறுப்பினர், தீவிர உறுப்பினர், போராளி என்ற நிலைகள் இருக்க வேண்டும். அடிப்படை உறுப்பினர் சாதாரனணமாக ஆதரவு தரும் ஆளாக மட்டும் இருப்பார். தீவிர உறுப்பினர் பயிற்சி பெற்றிருப்பார். போராளி களத்தில் இருந்து பணிகளை மேற்கொள்பவர்.

இங்கு களம் என்பது மேடைகள், கூட்டங்கள் ஆட்களைத் திரட்டுதல் கொடி பிடித்து, கட்டி, ஏற்றி முழக்கங்களை மேற்கொள்வது அல்ல. மனிதனின் அன்றாட, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது. ஏழ்மையில் உள்ள போராளிக்கு சாதாரண தேனீர் அங்காடியை இயக்கத்தின் மூலம் வைத்துக் கொடுத்து அதில் அவருக்குத் தேவையான வாழ்வாதாரத்திற்கு வழியையும் ஏற்படுத்தி, அவ்வங்காடி மூலம் மொழியையும் வழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும். இவ்வங்காடியில் தேனீர் விலை ரூ 4.00 டீ விலை ரூ 6.00 என நிர்ணயம் செய்ய வேண்டும். கேலிப் பேச்சுக்களைக் கண்டு கலங்காமல், இம்முறையில் தேனீரகம், நகலகம் மற்றும் உணவகம் என எங்கெல்லாம் தமிழை நடைமுறைப்படுத்த முடியுமோ அங்கெல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழால் பயனில்லை என்ற நிலையை மாற்ற வேண்டும். ஆட்சியைப் பிடிப்பது என்ற நோக்கில் செயல்படுவதை விட அடித்தளத்தை பிடிக்க வேண்டும். நம் நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் பெறும்பாண்மை வேண்டும். மக்கள் எதன் பின்னால் வருவார்கள் என நோக்கினால் புரியும்.

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வருமானத்திற்கு என்ன வழி என்று கணக்குப் போட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். மிகச்சிலரே மொழி, கலை என வருமானத்தைப் பற்றி கவலைப்படாமல் தொண்டு செய்கின்றனர். உணர்ச்சிகரமான பேச்சு மொழியையோ இனத்தையோ வாழவைத்துவிடாது. மொழியின் மீது பற்று இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் அவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லை. தன்னுடைய விருப்பத்திலிருந்து விலகி அதற்கு முரணாக செயல்பட வேண்டியுள்ளது.
பொருளாதாரம் என்பது நமது அன்றாடத் தேவைகளுக்கும், சமூகத்தில் தன்னுடைய தகுதியை உயர்த்திக்கொள்ளவும் உள்ள மிக முக்கியமான காரணியாகும். இதற்காக அனைத்து தர மக்களும் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் செலவிடுகின்றனர். எனவே மொழியை வளர்க்க பொருளாதாரம் என்பது ஒரு வலுவான காரணியாக இருப்பதால் அதன் மூலம் மொழியை வளர்க்கலாம்.